உடற்கல்வி ஆசிரியர்களின்றி விளையாட்டு திறன் முடக்கம்
தேவதானப்பட்டி: சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஒரு உடற்பயிற்சி ஆசிரியர் கூட இல்லாததால் விளையாட்டுத் திறன் முடங்கியுள்ளது.தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சில்வார்பட்டி, தேவதானப்பட்டி, எருமலை நாயக்கன்பட்டி, டி.வாடிப்பட்டி, அழகர் நாயக்கன்பட்டி, நல்லகருப்பன்பட்டி, நாகம்பட்டி மற்றும் உட்கடை கிராமங்களிருந்து எல்.கே.ஜி., முதல் பிளஸ் டூ வரை 2100 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் அதிக மாணவர்கள் மாணவிகள் படிக்கும் பள்ளியாக உள்ளது.மாணவர்களுக்கு வாரத்தில் ஒரிரு நாட்கள் உடற்கல்வி பாட வேளைகள் உள்ளது. இதில் உடற்பயிற்சி ஆசிரியர்கள் வாலிபால், கூடைப்பந்து, புட்பால்,ஓட்டம், நீளம், உயரம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பயிற்சி அளித்து மாணவர்களின் திறமையினை வெளிக்கொண்டு வருவார்கள்.கடந்தாண்டு இந்தப் பள்ளியில் மூன்று உடற்பயிற்சி ஆசிரியர்கள் இருந்த நிலையில் பணி ஓய்வு, மாறுதல் உள்ளிட்ட காரணங்களால் 8 மாதங்களாக ஒரு உடற்பயிற்சி ஆசிரியர் கூட இல்லை. இதனால் மாணவர்களது விளையாட்டுத் திறன் பாதித்துள்ளது.சில மாதங்களுக்கு முன் நடந்த குறுவட்ட போட்டிகளில் இப் பள்ளி மாணவர்கள் திறனை நிரூபிக்க முடியாமல் சோர்ந்து விட்டனர். கல்வித் துறை நிர்வாகம் உடற்பயிற்சி ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.