உள்ளூர் செய்திகள்

தடாகம் ரோட்டில் இருக்கிறது ஓர் அதிசயம்!

கோவை: தேர்தல் காலங்களில் கோவையில், ஓட்டுகள் எண்ணப்படும் இடம், தடாகம் ரோட்டில் அமைந்துள்ள அரசு தொழில்நுட்ப கல்லுாரி(ஜி.சி.டி.).ஓட்டு எண்ணிக்கை மையம் என, ஒரு கல்லூரியை அவ்வளவு எளிதில் தேர்வு செய்துவிட மாட்டார்கள். தேர்தல் நடத்தும் வருவாய்த்துறையில் அடிநிலைப் பணியாளராய் இருந்த நான், தேர்தல் காலத்தில் கடைபிடிக்கப்படும், கடுமையானதும் அவசியமானதுமான விதிமுறைகளை அறிவேன்.மையத்தில் வாக்குப்பெட்டிகளையோ, பதிவு இயந்திரங்களையோ தரையில் எண்ணிட்டு வைக்கும் அறைகளின் சுவர்கள், கதவு, ஜன்னல் இன்ன பிறவற்றின் பாதுகாப்பு, தொடர்ந்து ஆய்வு செய்து உறுதிப்படுத்தப்படும்.குறையிருந்தால் உடனடியாக சரி செய்யப்படும். ஜி.சி.டி.,யில் சரியாகவே இருக்கும். ஓட்டு எண்ணிக்கை நாளில், பணியாளர்களுடன் காவல் துறையினர், அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள், பத்திரிகை மற்றும் ஒளி ஊடகக்காரர்கள், உணவு, குடிநீர் விநியோகிப்போர் எல்லாரும் அவரவர் கடமையாற்ற கூடங்களும், அறைகளும், வாகனங்கள் நிற்க, வரப்போக வாசலும் இருக்க வேண்டும்.இவ்வளவு பாதுகாப்பும், வசதியும் தமிழகத்தில் உள்ள 40 தொகுதி மையத்திலும் இருக்குமே, கோவையில் மட்டும் அதிசயமா என்று கேட்கத் தோன்றும். இதை உருவாக்கியவர் ஒரு அதிசய மனிதர். அதை அறிந்தால் நீங்கள், பைசா நகரத்து சாய் கோபுரத்தையும், பாபிலோனின் தொங்கும் தோட்டத்தையும் வியப்பது போல் வியப்பீர்கள்.நம் நாட்டிற்குப் பொறியாளர்களை உருவாக்கக் கல்லூரி தேவை என்பதை, உணர்ந்த அந்த கோவைக்காரர் 1945ல் சென்னை மாகாண கவர்னரை அணுகினார். ஏற்கனவே தென்னிந்தியாவின் முதல் பாலிடெக்னிக்கை கோவைக்குச் பெற்றிருந்தார் அவர். இப்போது கல்லூரி கேட்டார்.இரண்டாம் உலகப்போர் நடக்கும் இவ்வேளையில் இதெல்லாம் முடியாது என்று மறுத்தார் கவர்னர். அவர் விடாமல் நச்சரித்ததால், நினைக்கவே முடியாத நிபந்தனையை கவர்னர் விதித்தார். 45 நாட்களில் கல்லூரி கட்ட வேண்டும்; அப்படி கட்டுவதாக இருந்தால், அனுமதி கிடைக்கும் என்பதே அந்த நிபந்தனை.அதை சவாலாக ஏற்றார் அவர். ஏராளமான கட்டடத் தொழிலாளிகளையும், பொறியாளர்களையும் திரட்டி இரவும் பகலும் இயக்கி, மூன்று நாட்கள் முன்னதாகவே, அதாவது 42 நாட்களில் வேலையை முடித்தார். அத்தனையும் தம் சொந்தச் செலவு.யார் அவர்? அவரை துரைசாமி என்றால் தெரியாது. ஜி.டி.நாயுடு என்றால்தான் தெரியும். பிறநாட்டு அரசாங்க அதிகாரிகளால் கூட, எளிதில் சந்திக்க முடியாத ஜெர்மனி நாட்டு சர்வாதிகாரி ஹிட்லரை, 1935ல் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டவர்.100 ஆண்டுகளுக்கு முன், உதிரி பாகங்களை வாங்கி முதன் முதலாக பஸ் தயாரித்தவர். பல்வேறு கண்டுபிடிப்புகளின் தந்தையான, அந்த மாபெரும் விஞ்ஞானியின் கட்டுமான சாதனைதான் ஜி.சி.டி.,!அந்த மாபெரும் மனிதரின் தன்னடக்கத்தையும், தன்னலமில்லா சேவையையும் அடுத்ததாக பாருங்கள்...கல்லுாரியின் கட்டுமானத்தை கண்டு வியந்து போன கவர்னர் ஆர்தர் ஹோப், கல்லூரிக்கு உங்கள் பெயரைத்தான் வைப்பேன் என்றார். வைத்தால் இதன் தொழில் நுட்பக் கல்விக்கு, துரும்பை கூடக் கிள்ளிப் போடமாட்டேன் என்றார், பள்ளிப்படிப்பு இல்லாத அந்த மேதை.அவரது வழிகாட்டுதல் இல்லாவிட்டால், தொழில்நுட்ப கல்வியை எப்படி போதிப்பது என்று அஞ்சிய கவர்னர், நாயுடு சொற்படியே ஆர்தர் ஹோப் காலேஜ் ஆப் டெக்னாலஜி எனப் பெயரிட்டார். அதன்பிறகு கல்லூரிக்கு இரண்டு லட்ச ரூபாய் நன்கொடைகள் தந்தார், ஜி.டி.நாயுடு.இப்போது அதன் பெயர், கவர்ன்மென்ட் காலேஜ் ஆப் டெக்னாலஜி. அவரைத் துரத்தித் துரத்தி திவான் பகதூர் பட்டம் தர முயன்றார் கவர்னர். நாயுடு ஏற்கவில்லை.1947ல் நாம் சுதந்திரம் அடைந்தபின், ஆர்தர் ஹோப் இங்கிலாந்துக்கு கப்பல் ஏறும் முன்பு கூட, உங்களுக்கு ஓர் பட்டம் வழங்கியே தீருவேன் என்றார். நீங்கள் கப்பலேறும் முன்பே, பட்டமும் கப்பலேறிவிடும் என்று நாயுடு கூற, வெடிச் சிரிப்புச் சிரித்த ஆர்தர் ஹோப், நாயுடுவை கட்டித்தழுவி விடைபெற்றார்!திரும்பிப்பார்ப்போம்!கவியன்பன் பாபு, இ-மெயில்: kavianbanbabu7@gmail.com.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்