பள்ளிகளில் ஆதார் முகாம்: பெற்றோர் வலியுறுத்தல்
உடுமலை: உடுமலையில் பள்ளி குழந்தைகளுக்கு,ஆதார் எண் பதிவு செய்வதற்கு சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி குழந்தைகளுக்கு, அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இந்த உதவித்திட்டங்களை பெறுவதற்கு, மாணவர்களுக்கு, ஆதார் எண்ணும் அவசியமாகிறது.மாணவர்களுக்கான உதவித்தொகை, பொதுத்தேர்வு எழுதுவோர் உட்பட துவக்கம் முதல் மேல்நிலை வரை, மாணவர்களின் ஆதார் எண் அவசியம் பதிவிட வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது.புதிதாக சேரும் குழந்தைகளுக்கு, ஆதார் எண் இருந்தால் மட்டுமே, அவர்கள் பள்ளியிலுள்ள திட்டங்களில் பயன்பெற முடியும் என்ற நிலையால், ஆசிரியர்கள் பள்ளி துவங்கியதுமே பெற்றோரிடம் ஆதார் எடுக்க அறிவுறுத்துகின்றனர்.இந்நிலையில், துவக்க நிலையில் புதிதாக மாணவர்களுக்கு ஆதார் எடுக்க வேண்டியள்ளது. நடுநிலை முதல் மேல்நிலை வரை ஆதார் எண்ணை புதுப்பித்தல், முகவரி மாற்றம், என வேறு சில தேவைகளும் ஏற்படுகிறது.உடுமலையில், தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம் மற்றும் தனியார் மையங்களில் ஆதார் எண் பதிவு செய்யப்படுகிறது. ஆனால், ஆதார் பதிவு செய்யப்படும் அரசு அலுவலகங்களில், நாள்தோறும் பொதுமக்கள் காத்திருப்பதால், மாணவர்களுக்கு ஆதார் எடுப்பதில், தாமதநிலை ஏற்படுகிறது.பெற்றோரும் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுகின்றனர். பெற்றோருடன் மாணவர்களும் செல்ல வேண்டிய கட்டாயத்தால், பள்ளிக்கு அடிக்கடி விடுப்பு எடுக்கும் நிலை ஏற்படுகிறது. முன்பு, குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு, ஒரு பள்ளியை மையமாக அமைத்து அங்கு ஆதார் பதிவு முகாம், ஒரு சில நாட்களுக்கு நடத்தப்படும். ஆனால் அந்த நடைமுறை இப்போது இல்லை.ஆதார் முகாம் அமைப்பதற்கு, பள்ளிகளின் சார்பில் கோரிக்கை வைத்தாலும், சம்பந்தப்பட்ட துறைகள் முகாம்கள் நடத்துவதில்லை. எனவே, பள்ளிகளில் சிறப்பு ஆதார் முகாம்கள் தொடர்ந்து நடத்த, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.