அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவு
மைசூரு: மைசூரு மாவட்டத்தில், தனியார் பள்ளிகளின் மீது பெற்றோர் கவனம் திரும்பியதால், நடப்பாண்டு ஒன்றாம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை, அரசு பள்ளியில் படித்து வந்த தங்கள் குழந்தைகளை, மீண்டும் ஆங்கில பள்ளியில் சேர்க்க துவங்கி உள்ளனர். 26 அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பூஜ்யமாக உள்ளது.கொரோனாவுக்கு முன், பெற்றோர் பலரும் தங்கள் பிள்ளைகள், ஆங்கில மீடியத்தில் படிக்க வேண்டும் என்பதற்காக தனியார் பள்ளிகளில் சேர்த்து வந்தனர். இதனால், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்தது. இதை தொடர்ந்து பல பள்ளிகள் மூடப்பட்டு வந்தன.கொரோனா கால கட்டம்கொரோனா கால கட்டத்தில், தனியார் பள்ளிகள் கட்டணத்தை உயர்த்தியது. இதை கட்ட இயலாதவர்கள் அரசு பள்ளிகளில் சேர்க்க துவக்கினர். இதனால் மீண்டும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தது.இதனால் கடந்தாண்டு, கர்நாடகா முழுதும் அரசு பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பில் 38 ஆயிரத்து 921 மாணவர்கள் சேர்ந்தனர். தற்போது நிலைமை சீரானதால், பெற்றோர் மீண்டும் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க துவங்கி உள்ளனர்.இதனால் நடப்பாண்டு, அரசு பள்ளிகளில் முதல் வகுப்பில் மட்டும், 36 ஆயிரத்து 296 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, 2,626 மாணவர்கள் குறைவாக உள்ளனர். இந்த வரிசையில், மாவட்டம் முழுதும் ஒன்றாம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை 9,270 மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது.கர்நாடகா முழுதும், 2022 - 23ம் ஆண்டு 4 லட்சத்து 29 ஆயிரத்து 489 மாணவர்கள் அரசு உதவி பெறும், உதவி பெறாத பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்ந்தனர். நடப்பாண்டு, 4 லட்சத்து 20 ஆயிரத்து 412 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். 9,077 மாணவர்கள் குறைந்துள்ளனர்.இம்முறை மாவட்டத்தின் பிரியாபட்டினத்தில் 11, ஹூன்சூரில் ஆறு, எச்.டி.கோட்டில் மூன்று, கே.ஆர்.,நகரில் மூன்று, டி.நரசிபுராவில் இரண்டு, நஞ்சன்கூடில் ஒன்று என 26 அரசு இளநிலை துவக்க பள்ளிகளில் மாணவர் சேர்க்கவில்லை. இதில், ஒன்பது உருது பள்ளிகளும் உள்ளன.கன்னட வழி பள்ளிகள்கன்னட மொழி வளர வேண்டும், கன்னட வழி பள்ளிகளின் உயிர் வாழ்வதற்கான முழக்கம் ஒவ்வொரு ஆண்டும் கூட்டங்களிலும், விழாக்களிலும் ஒலிக்கிறது. ஆனால், ஆங்கில மொழி மோகத்தால் கன்னட வழி பள்ளிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. இம்முறை மாவட்டத்தில் 26 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பூஜ்யமாக உள்ளது வேதனை அளிக்கிறது.