நவீன தொழில்நுட்பங்களால் அரசுக்கு செலவு குறையும்
சென்னை: அரசு கட்டடங்கள் கட்டும் பணியில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தும்போது, கட்டுமான செலவை குறைக்க முடியும் என பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.அரசு கட்டடங்கள் கட்டும் பணிகளில், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது குறித்து, பொதுப்பணித் துறை பொறியாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம், சென்னையில் நேற்று நடந்தது.அதை துவக்கி வைத்து, அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:பொதுப்பணித் துறையில் இருந்து ரயில்வே, மின்சாரம், நெடுஞ்சாலை, வீட்டுவசதி வாரியம், குடிநீர் வாரியம் என பல துறைகள் உருவாகிஉள்ளன. பல துறைகளுக்கு தாய் துறையாகவே பொதுப்பணித் துறை உள்ளது. அதன் பொறியாளர்கள் முழு ஈடுபாட்டுடன் உழைத்தால், துறையை மேலும் முன்னோக்கி எடுத்து செல்ல முடியும்.மதுரையில் கருணாநிதி நுாற்றாண்டு நுாலகம், கிண்டி பன்னோக்கு மருத்துவமனை கட்டடங்களை வடிவமைத்த பொதுப்பணித் துறை கட்டட கலைஞர்களை, முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார். இளம் பொறியாளர்கள் ஆற்றலையும், அறிவையும் வளர்த்து கொள்ள வேண்டும். வெளிப்படை தன்மையை நிலைநாட்டுவதற்காக, பொதுப்பணித் துறை முழுமையாக கணினிமயமாக்கப்பட்டு உள்ளது.கட்டுமான தொழில்நுட்பங்கள் மற்றும் நவீன இயந்திரங்கள் குறித்து ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. நவீன உலகில் எல்லா துறைகளிலும் புதிய கண்டுபிடிப்புகள், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பணிகள் நடக்கின்றன. அதேபோல, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தும்போது, அரசு கட்டடங்களுக்கான கட்டுமான செலவை குறைக்க முடியும். கட்டடங்களுக்கும் கம்பீரமான தோற்றம் கிடைக்கும். இது பொது மக்களை ஈர்க்கும். இதை பொறியாளர்கள் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.