புதுச்சேரி எழுத்தாளர்களின் நூல்களை வாங்க முடிவு!
புதுச்சேரி: புதுச்சேரி எழுத்தாளர்களின் நுால்கள், நுாலகங்களுக்கு கொள்முதல் செய்யப்படும் என்ற அறிவிப்பை 15 ஆண்டிற்கு பிறகு கலை பண்பாட்டு துறை அறிவித்துள்ளது.எழுத்தாளர்களும், கலைஞர்களும் வாழும் காலத்திலேயே கொண்டாடப்பட வேண்டியவர்கள். ஓர் இனத்தின் பண்பாட்டு செழுமையை மீட்டெடுத்து, அதை ஆவணப்படுத்தி சமூகத்துக்கு கொடுப்பவர்கள் இவர்களே.பண்பாட்டுக் காவலர்களாக விளங்கும் எழுத்தாளர்களை ஆவணப்படுத்துவதும், போற்றுவதும் அரசின் கடமைகளில் ஒன்று. துரதிஷ்டவசமாக அப்படியான நிகழ்வுகள் அரிதினும் அரிதாகவே அரங்கேறி வருகிறது. குறைந்தபட்சம் அவர்களின் நுால்களை கூட வாங்குவதில்லை என புதுச்சேரி எழுத்தாளர்கள் மனம் குமுறி வந்தனர்.புதுச்சேரி எழுத்தாளர்களின் 15 ஆண்டு கால கோரிக்கைக்கு கலை பண்பாட்டுத்துறை தற்போது செவி சாய்த்துள்ளது. புதுச்சேரி நுாலகங்களுக்கு இனி புதுச்சேரி எழுத்தாளர்களின் நுால்கள் கொள்முதல் செய்யப்படும் என்ற முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மேலும், புதுச்சேரி எழுத்தாளர்கள் தங்களுடைய நுால்களை பற்றிய விபரங்களை வரும் 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும், விதிமுறைகள் https://art.py.gov.in என்ற இணையதளத்தில் கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் முக்கிய அம்சமாக, கொள்முதலுக்கு அனுப்பப்படும் நுால்கள் அனைத்தும் 2020ம் ஆண்டிற்கு பிறகு பதிப்பிக்கப்பட்டவை யாக இருக்க வேண்டும்.கொள்முதல் செய்யப்படும் நுால்களுக்கு 15 சதவீதம் கழிவு அளிக்க வேண்டும். புத்தகத்துடன் மாதிரி புத்தகம் இணைக்க வேண்டும். ஒரு எழுத்தாளரிடமிருந்து அதிகபட்சம் இரண்டு தலைப்புகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படும்.விண்ணப்பதாரர் புதுச்சேரியில் பிறந்தவராகவோ, ஐந்தாண்டுகள் புதுச்சேரியில் விண்ணப்பிக்கும் நாளுக்கு முன் தொடர்ந்து குடியிருப்பவராக இருக்க வேண்டும் என நிபந்தனைகள் விதித்துள்ளது.நுால்கள் கொள்முதல் செய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டதும் புத்தக தேர்வு குழு அமைத்து புதுச்சேரி நுாலகங்களுக்கு கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் கொள்முதல் செய்யப்படும் நுால்கள் புதுச்சேரி-55, காரைக்கால்-19, மாகி-4, ஏனாம்-3 என மொத்தம் 81 நுாலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.சிந்தனையில் விளைந்த நுால்களை சொந்தமாக அச்சிட்டு எழுத்தாளர்கள் வெளியிட்டாலும், அரசு நுாலகங்களுக்கு அவர்களது நுால்கள் கொள்முதல் செய்வதன் மூலம் பொருளாதார ரீதியான இழப்பினை சரி செய்ய முடிகிறது.தமிழக அரசு, அங்குள்ள எழுத்தாளர்களின் நுால்களை நுாலகங்களுக்கு வாங்கி ஊக்குவித்து வருகின்றது. இருப்பினும் தமிழக அரசின் நுாலகங்களுக்காக, புதுச்சேரி எழுத்தாளர்களின் நுால்கள் கொள்முதல் செய்யப்படவில்லை. இதனால், சொந்த செலவில் நுால்களை அச்சிட்டு வெளியிட்ட புதுச்சேரி எழுத்தாளர்கள் கடுமையான மன அழுத்தத்தில் இருந்தனர்.தற்போது புதுச்சேரி எழுத்தாளர்களின் எழுத்தையும், இலக்கியத்தை யும் ஊக்குவிக்கும் வகையில் கலை பண்பாட்டு துறை எடுத்துள்ள நுால்கள் கொள் முதல் முடிவினை, தமிழறிஞர்கள், இலக்கியவாதிகள் வரவேற்றுள்ளனர்.