அமெரிக்க பல்கலைகளுக்கு இணையாக இந்திய கல்லுாரிகள்
சிவகாசி: அமெரிக்க பல்கலை கழகத்திற்கு இணையாக இந்திய கல்லுாரிகள் கல்வியில் கற்பிப்பதில் சிறந்து விளங்குகிறது, என அமெரிக்கா டெக்ஸ்சாஸ் பல்கலை பேராசியர் ரிச்சர்ட் கே.மின் சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழாவில் தெரிவித்தார்.இக்கல்லுாரியின் 25 வது வெள்ளி விழா ஆண்டினை முன்னிட்டு நடந்த கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழாவில் அவர் பேசியதாவது:உலக அளவில் உள்ள அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பயில அமெரிக்காவில் உள்ள பல்கலைகளை தேர்வு செய்கின்றனர். தற்போது இந்தியாவில் உள்ள கல்லுாரிகளிலும் கல்வி கற்றலில் உள்ள புதிய தொழில்நுட்பம் முறை, சிறந்த கட்டட அமைப்பு, ஆய்வக வசதி ஆகியவை அமெரிக்கா பல்கலைக்கு இணையாக உள்ளது. மாணவர்கள் இதனை நன்கு பயன்படுத்திக் கொண்டு உலக தரவரிசை பட்டியலில் நமது கல்லுாரியை உயர்த்தினால் வெளிநாட்டு மாணவர்கள் இங்கு வந்து படிப்பதற்கான சூழ்நிலை உருவாக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக பி.எஸ்.ஆர்., கல்வி குழுமங்கள் இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஸ்வரி தலைமை வகித்தனர். முன்னாள் மாணவர்கள் வெங்கட் நாராயணன், பெலிக்ஸ் அலெக்ஸ், ஜெயகிருஷ்ணன், ராஜா சொக்கலிங்கம், கனக பிரியா முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக அமெரிக்கா டல்லாஸ் மாகாணம் டெக்சாஸ் பல்கலைக்கழகம் கணினி துறை இயக்குனர் ஜெய் வீராசாமி, பேராசிரியர் ரிச்சர்ட் கே. மின் பங்கேற்றனர். முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிசாமி வாழ்த்தினர். பேராசிரியர் ரமணி முன்னாள் மாணவர் சங்க ஆண்டறிக்கை வாசித்தார்.2003 முதல் 2023 வரை கல்லுாரியில் படித்த முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர். முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. பேராசிரியர் கிருஷ்ணவேணி நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகம், முன்னாள் மாணவர்கள் சங்கம் செய்தனர்.