கழிப்பறைகளை சுத்தம் செய்ய மாணவர்களை பயன்படுத்தக்கூடாது
பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள அனைத்து அரசு தொடக்கம் மற்றும் உயர்நிலைப்பள்ளிகளிலும், கழிப்பறைகளை சுத்தம் செய்ய மாணவர்களை பயன்படுத்தக்கூடாது, என பள்ளி கல்வி துறை இயக்குனரகம் வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது.கோலார், பெங்களூரு, ஷிவமொகாவில் அரசு பள்ளி கழிப்பறைகளை, மாணவர்களை வைத்து துப்புரவு செய்ய வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் சஸ்பெண்ட் ஆகி உள்ளனர்.பணியாளர்கள் கடமைபள்ளிகளில், மாணவர்கள் கல்வி நடவடிக்கைகள் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட வேண்டும். கழிப்பறையை சுத்தம் செய்தல் போன்ற பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தாமல் பார்த்து கொள்வது, பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களின் கடமையாகும்.இதை மறந்து, செயல்பட்டால் ஆட்சேபனைக்கும், கண்டனத்துக்கும் உரியதாகும். இதுபோன்ற சம்பவங்களை அரசு தீவிரமாக எடுத்து கொண்டுஉள்ளது. இந்நிலையில், பள்ளிகளில் கழிப்பறைகளை துாய்மைபடுத்துவது குறித்து, பள்ளி கல்வி துறை இயக்குனரகம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.இந்த வழிகாட்டுதல்களை கர்நாடகாவில் உள்ள அனைத்து அரசு தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.வழிமுறைகள்?*கர்நாடகாவின் அனைத்து அரசு தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளிலும் கழிப்பறைகள் சுத்தம் செய்வது, பராமரிப்பதில் மாணவர்களை ஈடுபடுத்த கூடாது. மீறி செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்*பள்ளி பராமரிப்பு மானியத்தை எஸ்.டி.எம்.சி., எனும் பள்ளி வளர்ச்சி கண்காணிப்பு குழுக்களின் ஒத்துழைப்போடு, கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்த வேண்டும்*இது குறித்து மாணவர்களுக்கு பள்ளி வளர்ச்சி கண்காணிப்பு குழுக்கள், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்*பள்ளிகளில் சிறுவர் - சிறுமியருக்கு தனித்தனியாக கழிப்பறைகள் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும்*அதிகாரிகள் ஆய்வின் போது, கழிப்பறையை மாணவர்கள் சுத்தம் செய்வது தெரிய வந்தால், காரணமானவர்கள் மீது கல்வி துறை துணை இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்*சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், பிளாக் கல்வி அதிகாரி, கல்வி துறை துணை இயக்குனரே பொறுப்பு*அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளிலும் இந்த விதிமுறை பொருந்தும்.