எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்
இந்தாண்டின் முதல் ராக்கெட் திட்டம் வெற்றிகரமாக அமைந்ததால், இஸ்ரோ விஞ்ஞானிகளும், நாட்டு மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்கான செயற்கைக்கோளை வடிவமைத்து, பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் உதவியுடன், விண்ணில் நிலைநிறுத்துகிறது.ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., சி58 ராக்கெட், 469 கிலோ எடை உடைய, எக்ஸ்போசாட் செயற்கைக்கோளை சுமந்தபடி, நேற்று காலை, 9:10 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. பூமியில் இருந்து புறப்பட்ட, 22வது நிமிடத்தில் ராக்கெட் திட்டமிடப்பட்ட, 650 கி.மீ., துாரம் உள்ள புவி வட்ட பாதையில், எக்ஸ்போசாட் செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.பின், ஆப் செய்யப்பட்ட ராக்கெட் இன்ஜின் மீண்டும் இயக்கப்பட்டு, 350 கி.மீ., தொலைவுக்கு கீழே எடுத்து வரப்பட்டு, 10 ஆய்வு கருவிகளை உடைய சிறிய செயற்கைக்கோள், அந்த பாதையில் நிறுத்தப்பட்டது.இந்தாண்டின் முதல் ராக்கெட் திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டதை அடுத்து, கட்டுப்பாட்டு மையத்தில் இருந்த, இஸ்ரோ தலைவர் சோம்நாத், சக விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.ஐந்து ஆண்டுகள் ஆயுள் உடைய எஸ்க்போசாட் செயற்கைக்கோளில், எக்ஸ்பெக்ட், பொலிக்ஸ் ஆகிய அதிநவீன ஆய்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றை, கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள ராமன் ஆராய்ச்சி நிறுவனமும், யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையமும் உருவாக்கியுள்ளன.எக்ஸ்போசாட், இந்தியாவின் முதல் எக்ஸ்ரே வகை செயற்கைக்கோள். இது, விண்வெளியில் உள்ள கருந்துளைகளில் இருந்து வெளியேறும் ஊடுகதிர்களின் துருவ முனைப்பு அளவு, விண்மீன்களில் இருந்து வெளியேறும் கதிரியக்கம், வானியல் தன்மை குறித்து ஆய்வு செய்யும்.இதுவரை, விண்வெளியின் கதிரியக்கம், நிறமாலை தொடர்பான தகவல்கள், டெலஸ்கோப் அல்லது, ரேடியோ அலைவரிசை வாயிலாக பெறப்பட்டன. தற்போது, ஊடுகதிர்களின் வாயிலாக விண்வெளி தரவுகளை, எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் உதவியுடன் துல்லியமாக பெறலாம்.பத்து ஆய்வு கருவிகளை உடைய, வீசாட் என, பெயரிடப்பட்ட சிறிய செயற்கைக்கோள், கேரள மாநிலம், திருவனந்தபுரம், லால்பகதுார் சாஸ்திரி தொழில்நுட்ப நிறுவனத்தின், மகளிர் குழுவினரால் உருவாக்கப்பட்டது. இது, கேரள அரசின் மாணவர் செயற்கைக்கோள் திட்டத்தில் வடிவமைக்கப்பட்டது. இது, சில மாதங்களுக்கு, பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளும்.ககன்யான் திட்டத்திற்கு தயாராகும் ஆண்டாக 2024 அமையும்! இஸ்ரோ தலைவர் சோம்நாத் அளித்த பேட்டி:புதிய ஆண்டில், வெற்றியுடன் இஸ்ரோ, பயணத்தை துவங்கியுள்ளது. இதற்காக, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள். விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களுக்கு, தொடர்ந்து ஊக்கமளித்து வரும் பிரதமர் மோடிக்கு நன்றி. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும், ககன்யான் திட்டத்தின் சோதனை முயற்சி, 2023ல் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இந்தாண்டில் இரு சோதனை திட்டங்கள் நடத்தப்படும். இதன் வாயிலாக அடுத்த ஆண்டில், ககன்யான் திட்டத்தை செயல்படுத்த முடியும். எனவே, அத்திட்டத்திற்கு தயாராகும் ஆண்டாக, 2024 அமையும். இந்தாண்டில், 12 முதல் 14 ராக்கெட்கள், விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது. இஸ்ரோவும், அமெரிக்காவின், நாசாவும் இணைந்து, நிசர் எனும் செயற்கைக்கோளை செலுத்த உள்ளன. தமிழகத்தின் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.