தேர்தல் பணி பயிற்சியில் ஆசிரியர்கள் அலட்சியம்?
மாமல்லபுரம்: லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு, ஏப்., 19ம் தேதி நடக்கிறது. ஆசிரியர்கள் உள்ளிட்டோர், ஓட்டுப்பதிவு தலைமை அலுவலர் மற்றும் ஓட்டுப்பதிவு அலுவலர் 1, ஓட்டுப்பதிவு அலுவலர் 2 என நியமிக்கப்பட்டுள்ளனர்.கடந்த மார்ச் 31ம் தேதி மற்றும் நேற்று முன்தினம், ஓட்டுப்பதிவு நடைமுறைகள் குறித்து, பயிற்சி அளிக்கப்பட்டது. திருப்போரூர் சட்டசபை தொகுதி பயிற்சி, பையனுார் ஆறுபடை வீடு தொழில்நுட்பக் கல்லுாரியில் நடந்தது.பயிற்சிக்கு, காலை 9:00 மணிக்கே வருமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. முதலாம் பயிற்சி நாளில், பயிற்சி நடத்துவது குறித்த குழப்பம் காரணமாக, தாமதமாக அறிவிக்கப்பட்டது. அன்று, ஏராளமான ஆசிரியர்கள் பகல் 12:00 மணிக்கு பிறகே வந்தனர். குழப்பத்தால் தாமதமானதாக தெரிவித்தனர்.நேற்று முன்தினம் நடந்த பயிற்சி குறித்து முன்னதாகவே அறிவிக்கப்பட்டும், பகல் 12:00 மணிக்கு பிறகே பெரும்பாலான ஆசிரியர்கள் வந்தனர்.அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பயிற்சி அறையை தேடி, அரைமணி நேரத்திற்கும் மேல் வீணடித்தனர். 11:00 மணிக்கு முன் வந்தவர்களுக்கு, பயிற்சி அளித்துக்கொண்டிருந்த நிலையில், அவர்கள் தாமதமாகவே பயிற்சியில் இணைந்தனர்.இது குறித்து, தேர்தல் பிரிவினர் கூறியதாவது:ஒவ்வொரு தேர்தல் பயிற்சியிலும், ஆசிரியர்கள் தாமதமாக வருவதையே வழக்கமாக்கி கொண்டுள்ளனர். அவர்கள் பணிபுரியும் அதே தொகுதிக்குள் தான், தேர்தல் பணிக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஆனால், குறித்த நேரத்தில் வருவதில்லை. பயிற்சியில் அலட்சியமாக உள்ளனர். பயிற்சியை தவறவிட்டு, ஓட்டுப்பதிவின் போது தான், மண்டல அலுவலரிடம் சந்தேகம் கேட்டு நச்சரிப்பர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.