உள்ளூர் செய்திகள்

சங்கத்தமிழ் மன்னர்களின் நாணயங்களை கண்டறிந்தவர் இரா.கிருஷ்ணமூர்த்தி

சென்னை: தமிழகத்தில், சங்க கால மன்னர்கள் பெயர் பொறித்த நாணயங்களைக் கண்டறிந்தவர், நாணயவியல் அறிஞர் இரா.கிருஷ்ணமூர்த்தி என தென்னிந்திய நாணயவியல் இதழின் உதவி ஆசிரியர் ராதாகிருஷ்ணன் கூறினார்.தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், தென்னிந்திய நாணயவியல் சங்கத்தின், 32வது ஆண்டு மாநாட்டில், பி.ஆர்.அம்பேத்கர் திறந்தநிலை பல்கலையின் வரலாற்றுத் துறை, தெலுங்கானா மாநில உயர்கல்வி கவுன்சில் ஆகியவை சார்பில், தென்னிந்திய வரலாற்றின் மறுசீரமைப்பில் நாணயவியல் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.நிறைவுப் பகுதியாக, தமிழக நாணயவியல் சங்கத்தின் நிறுவனரும், தினமலர் நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான இரா.கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு நடந்தது. இதில், தென்னிந்திய நாணயவியல் இதழின் உதவி ஆசிரியர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:இரா.கிருஷ்ணமூர்த்தி, ஒரு பத்திரிகையாளராக இருந்த போதிலும், தன் நாளிதழில் தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை அமல்படுத்தி, புரட்சி செய்து அரசை ஏற்க வைத்தார். ராமமூர்த்தி என்ற தமிழ் அறிஞரின் துாண்டுதலால், தமிழ் எழுத்துக்களின் தோற்றம், வளர்ச்சியை ஆய்வு செய்வதில் ஆர்வமானார். தமிழ் வட்டெழுத்துகளை ஆய்வு செய்து, தமிழ் வட்டெழுத்து, சேர நாட்டில் வட்டெழுத்து, பிற்கால வட்டெழுத்து போன்ற ஆய்வு நுால்களை எழுதினார்.சங்க கால நாணயங்களின் வாயிலாக, தமிழ் பிராமி எழுத்து ஆராய்ச்சியை துவக்கினார். சங்க காலத்தில் சேர, சோழ, பாண்டிய நாடுகளில் வழக்கில் இருந்த நாணயங்களையும், சங்க கால மலையமான் நாணயம் பற்றியும் ஆய்வு செய்தார். அவர் ஆங்கிலத்தில் எழுதிய, சங்கம் ஏஜ் தமிழ் காயின்ஸ் என்ற ஆய்வு நுால் வரலாற்று ஆவணமாக மாறியது.வடதமிழகத்தை ஆண்ட பல்லவர்களின் நாணயங்கள் பற்றியும், தமிழகத்தில் கிடைத்த ரோம, கிரேக்க, சீன நாட்டினரின் அரிய நாணயங்கள் குறித்தும், ஆராய்ந்து கட்டுரைகள் எழுதினார். தமிழகத்தை ஆண்ட சங்க கால மன்னர்களான பெருவழுதி, மாக்கோதை உள்ளிட்ட பெயர் பொறித்த நாணயங்களை முதலில் கண்டறிந்தவரும் அவர் தான்.தமிழக நாணயவியல் சங்கத்தை உருவாக்கி, தென்னிந்திய நாணயவியல் சங்கமாக வளர்த்து, ஆராய்ச்சி மாநாடுகளை நடத்தினார். குழந்தைகளிடம் நாணயம் சேகரிக்கும் ஆர்வத்தை துாண்டும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அரிய நாணயக் கண்காட்சிகளையும் நடத்தினார்.இவரின் ஆய்வுகளுக்காக கவுரவ டாக்டர் பட்டம் பெற்றதுடன், மத்திய அரசின் தொல்காப்பியர் விருதையும் பெற்றார். அவரின் நினைவாக இங்கு, முதல் அறக்கட்டளை சொற்பொழிவு நடக்கிறது. அதற்கு உறுதுணையாக இருந்த அவரின் மனைவி ராஜலெட்சுமி பாராட்டுக்குரியவர்.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக நடந்த கருத்தரங்கில், உஸ்மானியா பல்கலையின் முன்னாள் பதிவாளர் கிஷண்ராவ், நாணயவியலின் முக்கியத்துவம் பற்றி பேசினார். பேராசிரியர் ராஜாரெட்டி, சமீபத்தில் கண்டறியப்பட்ட சாதவாகன நாணயங்களின் வழியாக வெளிப்பட்ட வரலாற்றை விளக்கினார். அடுத்த சந்ததியினருக்கான வரலாற்றை கட்டமைப்பது, தற்போது கிடைக்கும் பண்டைய நாணயங்களின் வரலாறு என்பதை கருத்தரங்கின் இயக்குனர் சுதாராணி விளக்கினார்.ஹைதராபாத் பல்கலையின் வரலாற்றுத் துறை பேராசிரியர் கே.பி.ராவ், மத்திய தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர் சத்தியமூர்த்தி, ரிசர்வ் வங்கியாளர் ராதாகிருஷ்ணா, தென்னிந்திய நாணயவியல் சங்க அருங்காட்சியக கண்காணிப்பாளர் ஏ.வி.என்.ரெட்டி, பல்கலையின் டீன் ஸ்ரீனிவாஸ் வதானம், ஜி.தயாகர் உள்ளிட்டோர் நாணயவியலின் முக்கியத்துவம் பற்றியும், மாணவர்கள் ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியம் பற்றியும் பேசினர். தென்னிந்திய நாணயவியல் சங்கத்தின், 32வது ஆண்டு மாநாட்டில், தென்னிந்திய நாணயவியல் இதழின் 31வது தொகுதி வெளியிடப்பட்டது. ராஜலெட்சுமி கிருஷ்ணமூர்த்தி, திருப்பதி வெங்கடேஷ்வரா பல்கலையின் பேராசிரியை ராஜலெட்சுமிக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்