மனம் தளராத சாதனை பெண் பல்லவி
நிலச்சரிவில் தன் மொத்த குடும்பத்தை பறிகொடுத்தாலும், மனம் தளராத ஒரு பெண், டாக்டரேட் பட்டம் பெற்று, பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். தனிமையை வென்று சாதனை படைத்து உள்ளார்.பொதுவாக பெண்கள் பலவீனமானவர்கள், வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்கள், வலிகளை கண்டு மனம் துவண்டுவிடுவர் என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால் உண்மையில் பெண்கள் உடல் அளவில், பலவீனமாக இருந்தாலும், மனதளவில் இரும்பு போன்று உறுதியானவர்கள் என்பது, சான்றோரின் கருத்து. குறிப்பாக ஆண்களை விட, பெண்களுக்கு மன வலிமை அதிகம் என்பதை, பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துள்ளனர்.சமாளிப்பு திறன்எப்படிப்பட்ட கஷ்டங்களையும் சமாளிக்கும் திறன் கொண்டவர்கள் பெண்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர்தான், இந்த கட்டுரையின் நாயகி பல்லவி.குடகு, மடிகேரியின் மங்களாதேவி நகரில் ஒரு சிறிய வீட்டில் வசித்தவர் பல்லவி, 34. தந்தையை இழந்த இவர், தன் தாய், தங்கை, தம்பியுடன் வாழ்ந்தார். இவரது தாய் ராதா பட், தினக்கூலியாக பணியாற்றி, குடும்பத்தை காப்பாற்றினார்.கடந்த 2006ல் குடும்பத்தினர் உறக்கத்தில் இருந்தபோது, நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ராதா பட், தம்பி அபிஷேக், தங்கை ஜோதி ஆகியோர் பலியாகினர். பல்லவி மட்டுமே உயிர் பிழைத்தார்.நிலச்சரிவால் தன் குடும்பத்தையும், வீட்டையும் இழந்து பரிதவித்த பல்லவிக்கு அப்போது 16 வயது. பல போராட்டங்களுக்கு பின், மனம் தளராமல் படிப்பில் கவனம் செலுத்தி 'டாக்டரேட்' பெற்றுள்ளார்.அசம்பாவிதத்துக்கு பின் மாவட்ட நிர்வாகம், பல்லவிக்கு மூன்று லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியது. இந்த பணத்தை, அவர் பட்டப்படிப்பை முடிக்க பயன்படுத்தினார். மங்களூரு பல்கலைக்கழகத்தில், வர்த்தகம் விஷயத்தில் முதுகலை பட்டப்படிப்பு பெற, வங்கியில் கடன் பெற்றார்.உதவி பேராசிரியைவங்கிகள் தொடர்பாக, ஆராய்ச்சி செய்து புத்தகம் எழுதி, டாக்டரேட் பெற்றுள்ளார். தற்போது ஜெயின் பல்கலைக்கழகத்தில், உதவி பேராசிரியையாக பல்லவி பணியாற்றுகிறார். இவரது வாழ்க்கை, நலிவடைந்த பெண்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது.பல்லவி கூறியதாவது:நிலச்சரிவு சம்பவம் நடந்து, ஒரு மாதத்துக்கு பின்னரே, என் தாய், தம்பி, தங்கை இறந்தது எனக்கு தெரிந்தது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, என் குடும்பத்தினர் பலத்த காயங்களுடன் மங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக, என்னிடம் கூறினர்.இந்த அசம்பாவிதம், என் மனதையும், உடல் ஆரோக்கியத்தையும் அதிகம் பாதித்தது. அவ்வப்போது தற்கொலை எண்ணம் தோன்றியது. ஆனால் என் தாய்க்கு, தன் பிள்ளைகள் நன்றாக கல்வி கற்க வேண்டும், மற்றவரை போன்று ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்ற ஆசை இருந்தது. எனவே தற்கொலை எண்ணத்தை ஒதுக்கி தள்ளிவிட்டு, என் தாயின் கனவை நிறைவேற்ற, படிப்பில் கவனம் செலுத்தினேன்.என் சித்தப்பா சுந்தரும், சித்தி ருக்மிணியும் எனக்கு ஆதரவாக இருந்தனர். என்னை படிக்கும்படி ஊக்கப்படுத்தினர். என் நலம் விரும்பிகள், நண்பர்கள் என்னை சந்தித்து தைரியப்படுத்தினர். தனிமையில், சுதந்திரமாக வாழ்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -