பள்ளி பாடப்புத்தகங்கள் விலை திடீர் உயர்வு
சென்னை: தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில், தனியார் பள்ளிகளுக்கு வினியோகம் செய்யப்பட்ட பாடப்புத்தகங்கள் விலை, 30 முதல் 90 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.தமிழகத்தில், 44,000க்கும் அதிகமான அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இவற்றில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 75 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கான பாடப்புத்தகங்கள், தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் அச்சிடப்பட்டு வினியோகம் செய்யப்படுகின்றன.அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு, தமிழக அரசு சார்பில் பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.தனியார் பள்ளிகளுக்கு குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. சி.பி.எஸ்.சி., பாடத்திட்ட பள்ளிகளுக்கு, தமிழ் பாடப்புத்தகங்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. மற்ற புத்தகங்களை, அப்பள்ளிகள் வெளியில் வாங்குகின்றன.கடந்த 2018 - 19ம் கல்வியாண்டில், பாடப்புத்தகங்களின் விலை ஏற்றப்பட்டது. அதன்பின், கடந்த ஜூன் மாதம் மீண்டும் விலை உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 2.9 கோடி; தனியார் பள்ளிகளுக்கு 1.2 கோடி என மொத்தம், 4.1 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டன.பக்க எண்ணிக்கை அடிப்படையில், புத்தகங்களுக்கான விலையை நிர்ணயம் செய்ய, பாடநுால் கழகத்திற்கு அரசு நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில், 30 முதல் 90 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.உதாரணமாக, 8ம் வகுப்பு தமிழ் புத்தகத்தின் விலை, 120 ரூபாயில் இருந்து, 170 ஆகியுள்ளது. ஆங்கில புத்தகத்தின் விலை, 120ல் இருந்து 180 ரூபாயாக உயர்ந்துள்ளது.ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரையிலான புத்தகங்களுக்கு, 30 முதல் 40 வரையும்; ஐந்தாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை, 30 முதல் 50; எட்டாம் வகுப்பு புத்தகத்திற்கு 40 முதல் 70; ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையான புத்தகங்களுக்கு, 50 முதல் 90 ரூபாய் வரை, விலை உயர்ந்துள்ளது.இதுகுறித்து, பாடநுால் கழக அதிகாரிகள் கூறியதாவது:பாடநுால்களுக்கு தேவையான காகிதம் விலை 57 சதவீதம், மேல் அட்டை 27 சதவீதம், அச்சுக்கூலி இரண்டு சதவீதம் உயர்ந்துள்ளது.கடந்த 2018 - 19ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட, சராசரியாக 45 சதவீதம் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. அதை சரிகட்டவே விலை உயர்த்தப்பட்டுள்ளது. லாப நோக்கத்தில் விலையை உயர்த்தவில்லை. நஷ்டம் ஏற்படுவதைத் தவிர்க்கவே, விலை உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.