வாஞ்சையுடன் அணைத்த பிஞ்சுக்கைகள்: முண்டக்கையில் நெகிழ்ச்சி
திருவனந்தபுரம்: நிலச்சரிவால் குழந்தைகள் உயிரிழந்த வயநாடு பள்ளிக்கே மீண்டும் திரும்பவும் மாறுதல் பெற்று வந்த ஆசிரியை ஷாலினி, குழந்தைகளின் பாசத்தில் கண்கலங்கி நின்றார்.கடந்த ஜூலை 30ம் தேதி அதிகாலை வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை ஆகிய இரு கிராமங்கள் கனமழை, நிலச்சரிவு காரணமாக மண்ணில் புதையுண்டன. இதில் 400க்கும் மேற்பட்டோர் பலியாகினர். முண்டக்கை பள்ளியில் ஆசிரியை ஆக செயல்பட்ட ஷாலினி, நிலச்சரிவிற்கு 46 நாட்களுக்கு முன், ஜூன் 14ம் தேதி மீனங்காடி ஜி.எல்.பி., பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.பிரியா விடைஅவர் மாறுதலில் சென்றபோது, பள்ளிக்குழந்தைகளும், ஆசிரியர்களும் அவருக்கு கண் கலங்கி கண்ணீர் விட்டு பிரியா விடை கொடுத்தனர். இத்தகைய சூழ்நிலையில் தான் நிலச்சரிவு நடந்து விட்டது. இதில், குறிப்பிட்ட அந்த பள்ளியில் படித்த 11 குழந்தைகள் உயிரிழந்து விட்டனர். உயிரிழந்த குழந்தைகளை அடையாளம் காண அழைக்கப்பட்டவர்களில் ஒருவரான ஆசிரியை ஷாலினி கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது.இந்நிலையில் நிலச்சரிவுக்கு பிறகு செப்.,2ம் தேதி மேப்பாடியில் மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது. பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேரள கல்வி அமைச்சர் சிவன் குட்டி மாணவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது சில குழந்தைகள், நாங்கள் கேட்பதை செய்து தர வேண்டும் என்று கேட்டனர். அவர்கள் என்ன கேட்கின்றனர் என்பதை அறியாத சிவன் குட்டி, என்ன கேட்டாலும் கட்டாயம் செய்கிறேன், கேளுங்கள் என்றார்.அழுதார் ஆசிரியர் ஷாலினிஅப்போது மாணவர்கள், தங்கள் மீது அன்பை பொழிந்த ஆசிரியை ஷாலினியை மீண்டும் இடமாற்றம் செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். குழந்தைகளின் மனநிலையை புரிந்து கொண்ட அமைச்சர் கட்டாயம் செய்வதாக உறுதி அளித்தார். அதன்படி சிறப்பு உத்தரவு மூலம் ஷாலினியை மீண்டும் பழைய முண்டக்கை பள்ளிக்கு மாறுதல் செய்து உத்தரவிட்டார்.மாறுதல் உத்தரவுடன் நேற்று முன்தினம் (செப்.,07) ஆசிரியர் ஷாலினி முண்டக்கை பள்ளிக்கு திரும்பி வந்த போது, குழந்தைகள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். கட்டிப்பிடித்தும், கன்னத்தில் முத்தமிட்டும், கண்ணீர் விட்டும் ஷாலினியை வரவேற்றனர். நிலச்சரிவால் இழந்த குழந்தைகளின் நினைவுகள் மனதில் எழுந்த ஷாலினியும் உணர்ச்சிவசப்பட்டு கதறினார்.பின்னர் அவர் கூறியதாவது:முண்டக்கையில் உள்ள குழந்தைகளுடன் எனக்கு நெருக்கமான பந்தம் இருக்கிறது. நாங்கள் ஒன்றாக பாடுவோம், நடனமாடுவோம், விளையாடுவோம். நான் சிலருக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்தேன். என்னிடம் சைக்கிள் கற்க விரும்பிய இரண்டு மாணவிகள் நிலச்சரிவுகளால் அடித்துச் செல்லப்பட்டது வேதனை அளிக்கிறது.மீண்டும் குழந்தைகளின் மன கஷ்டத்தை போக்குவதில் கவனம் செலுத்துவேன். மாணவர்கள் மற்றும் பெற்றோர் என்னை மீண்டும் முண்டக்கை பள்ளிக்கு இடமாற்றம் செய்ய எடுத்த முயற்சிகளுக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.