உணவு பதப்படுத்துதல் பூங்கா அமைக்கிறது யு.ஏ.இ.,
மும்பை: இந்தியாவில் கிட்டத்தட்ட 16,500 கோடி ரூபாய் துவக்க முதலீட்டில், உணவு பதப்படுத்துதல் பூங்காவை அமைப்பதற்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முன்வந்திருப்பதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.மும்பையில் நடந்த இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான 12வது முதலீடு தொடர்பான கூட்டத்துக்குப் பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:இந்தியாவில், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்குள் உணவுப் பூங்கா அமைப்பதற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது. துவக்க முதலீடாக, கிட்டத்தட்ட 16,500 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ள இந்த பூங்காவில், இந்திய விவசாயிகளின் உயர்தரம் மிக்க விளைபொருட்களை பயன்படுத்தி, உணவு ரகங்கள் தயாரிக்கப்படும். அவற்றை, ஐக்கிய அரபு எமிரேட்சில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இந்த பூங்காவை அமைப்பது தொடர்பாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்திய அரசு மற்றும் தொடர்புடைய மாநில அரசுகள் இணைந்து ஒரு குழுவை ஏற்படுத்த ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.இந்தியாவில் தகவல் தொகுப்பு மையங்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மையங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்தும் விரிவான பேச்சு நடத்தப்பட்டது.இந்தியாவின் அன்னிய முதலீடு மையத்தை, முதலாவது வெளிநாடாக, ஐக்கிய அரபு எமிரேட்சில் அமைக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார்.புதிய முதலீட்டு ஒப்பந்தம்ஐக்கிய அரபு எமிரேட்சுடன் இந்தியா மேற்கொண்டுள்ள இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம், கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி நடைமுறைக்கு வந்ததாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கான ஒப்பந்தம், அபுதாபியில் கடந்த பிப்ரவரி மாதம் கையெழுத்தானதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன், 2013 டிசம்பரில் கையெழுத்திடப்பட்ட, இருதரப்பு முதலீட்டு மேம்பாடு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம், கடந்த மாதம் 12ம் தேதி காலாவதியான நிலையில், புதிய ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.