பள்ளிகளுக்கு மிரட்டல்: திசை திருப்பும் முயற்சியா?
புதுடில்லி: டில்லி மற்றும் ஹைதராபாதில் உள்ள சி.ஆர்.பி.எப்., பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இ - மெயில் வாயிலாக வந்த மிரட்டல் போலி என தெரியவந்துள்ளது.டில்லி ரோகிணி பகுதியில் உள்ள சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு சொந்தமான பள்ளியின் சுற்றுச்சுவர் அருகே கடந்த 20ம் தேதி காலை குண்டு வெடித்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை என்றபோதிலும், வெடிகுண்டு வைத்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.இந்நிலையில், டில்லி ரோகிணி மற்றும் துவாரகா பகுதியில் உள்ள இரண்டு சி.ஆர்.பி.எப்., பள்ளிகள், தெலுங்கானாவின் ஹைதராபாதில் உள்ள சி.ஆர்.பி.எப்., பள்ளி, ஹரியானாவின் பஞ்ச்குலா மற்றும் உ.பி.,யின் ராம்புரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இ - மெயில் வாயிலாக நேற்று முன்தினம் இரவு மிரட்டல் விடுக்கப்பட்டது.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட ஜாபர் சாதிக், போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதை அடுத்து சர்வதேச அளவிலான அழுத்தம் அதிகரித்துள்ளதாகவும், இதில் முதல்வர் குடும்பத்தினருக்கு உள்ள தொடர்பு குறித்து வரும் தகவல்களை திசை திருப்பவே வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த இ- மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பள்ளிகளில் போலீசார் சோதனை நடத்தியதில், வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பது தெரியவந்தது.