கனடா குடியுரிமையில் மாற்றம்; இந்தியர்களுக்கு பாதிப்பு?
ஒட்டாவா: குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்கும் முறையில் சில திருத்தங்களை கனடா அரசு செய்துள்ளது. இதனால், கனடாவில் இருக்கும் அல்லது கனடா செல்ல நினைக்கும் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.வட அமெரிக்க நாடான கனடாவில், பி.ஆர்., எனப்படும் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு, எக்ஸ்பிரஸ் என்ட்ரி என்ற நடைமுறை உள்ளது. இதன்படி, குடியுரிமை பெறுவதற்காக விண்ணப்பிப்பதில், இந்தியர்களே முன்னிலையில் உள்ளனர். கடந்தாண்டில் மட்டும், 52,106 இந்தியர்களுக்கு இவ்வாறு விண்ணப்பிக்க அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது, அந்தாண்டில் வழங்கப்பட்ட மொத்த விண்ணப்பங்களில், 47 சதவீதமாகும்.எக்ஸ்பிரஸ் என்ட்ரி முறையில், கனடாவின் குடியுரிமை பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது, ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய, கல்வி, வேலை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். அதிக மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.இந்த வகையில், கனடாவில் வேலை பார்ப்பதற்கான நிறுவனம் அளிக்கும் நியமன உத்தரவு கடிதத்துக்கு, 50 - 200 புள்ளிகள் வரை கொடுக்கப்பட்டு வந்தது. இந்த நியமன கடிதத்துக்கான மதிப்பெண்கள், இனி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என, கனடா அரசு கூறியுள்ளது.ஏற்கனவே, குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளோர் மற்றும் காத்திருப்போருக்கு இது பொருந்தாது. அதே நேரத்தில் எக்ஸ்பிரஸ் என்ட்ரி வாயிலாக விண்ணப்பிக்காத, அதே நேரத்தில் வேலைக்கான உத்தரவு கடிதம் உள்ளோருக்கு, இனி இந்த மதிப்பெண் வழங்கப்படாது.போலி உத்தரவு கடிதங்கள் வாயிலாக பலர் விண்ணப்பிப்பதால், மோசடிகளை தடுக்க, பணி உத்தரவு கடிதங்களுக்கான மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை என்று முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கனடாவில் தற்போது தற்காலிகமாக பணியாற்றும் மற்றும் கனடாவில் பணியாற்றுவதற்கான பணி உத்தரவு பெற்றுள்ள இந்தியர்களுக்கு, இதனால் பாதிப்பு ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.