சாய் பல்கலையில் முதலாமாண்டு பட்டமளிப்பு விழா
சென்னை: சென்னையில் உள்ள சாய் பல்கலைக்கழகத்தில் முதல் பட்டமளிப்பு நடந்தது. சிறப்பு விருந்தினராக, இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், நிறுவனருமான நாராயண மூர்த்தி கலந்துகொண்டார்.இதில் தொழில்நுட்ப சட்டம் மற்றும் கொள்கை, தகராறுகளுக்கான தீர்வு, சட்டம் மற்றும் விதிமுறைகள் ஆகியவற்றில் சிறப்புத் தகுதி பெற்று முதுகலை டிப்ளமோ பட்டம் பெற்றார்கள். ஒழுங்குமுறை ஆய்வுகள் படிப்பைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் எல்.எல்.எம். பட்டம் பெற்றார்கள். நான்கு மாணவர்கள் பி.எஸ்.சி, பி.ஏ. இளங்கலை பட்டங்களைப் பெற்றார்கள்.பல்வேறு துறைகளைக் கொண்ட டீன் பட்டியல் மற்றும் தரவரிசைப் பட்டியலில் முன்னணி வகித்த மாணவர்களுக்கு 10 சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன. இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.சாய் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் வேந்தருமான ரமணி பேசுகையில், மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடங்களைத் தேர்வு செய்து படிக்கலாம் என்பதோடு பல்வேறு துறை சார்ந்து தங்களுடைய எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இங்கே கருத்தரங்கு பாணியிலான கற்பித்தல் முறை பின்பற்றப்படுகிறது. அதில், ஒரே துறையைச் சார்ந்த பல்வேறு நிபுணர்கள் தங்கள் கோணத்தில் இருந்து பாடங்களை நடத்துவார்கள். இது, நாங்கள் பின்பற்றும் கற்பித்தலின் ஐந்து படிநிலைகளான ஈடுபாடு, ஆய்வு, விளக்குதல், விரிவாக்குதல், மதிப்பீடு ஆகியவற்றை மேம்படுத்துகிறது, என்றார்.இந்தப் பட்டமளிப்பு விழாவில், மணிப்பால் குளோபல் எடுகேஷன் தலைவர் பத்மஸ்ரீ டி.வி. மோகன்தாஸ் பை, அப்பல்லோ மருத்துவமனை குழும நிர்வாக இயக்குநர் ப்ரீத்தா ரெட்டி, ஐ.ஐ.எம். கோழிக்கோடு இயக்குநர் மற்றும் தகைசால் பேராசிரியர் டேபாஷிஷ் சாட்டர்ஜி, இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி வெங்கடாசலய்யா ஆகியோரும் கலந்துகொண்டனர்.