உள்ளூர் செய்திகள்

மாணவர்களை குறி வைக்கும் மோசடி கும்பல்

சென்னை: இலவச, லேப்டாப் வழங்குவதாக, சமூக வலைதளங்களில் மோசடி கும்பல் பரப்பும், போலி இணையதள இணைப்பில், மாணவர்கள் தங்களின் தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம் என, சைபர் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.நடப்பு நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டில், அடுத்த இரண்டு ஆண்டுகளில், 20 லட்சம் கல்லுாரி மாணவர்களுக்கு, இலவச லேப்டாப் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி சைபர் மோசடி கும்பல், போலி இணையதளங்களை உருவாக்கி, மாணவர்களின் தனிப்பட்ட தகவல்களை திரட்டி வருகிறது.உதாரணமாக, மாணவர்களுக்கு மடிக்கணினி ஆதரவு - 2025 என்ற பெயரில், நடப்பு கல்வியாண்டில், 9.6 லட்சம் மாணவர்களுக்கு, இலவச, லேப்டாப் வழங்குவதாகக் கூறி, சில நாட்களாக சமூக வலைதளங்களில், போலியான இணைய தள, லிங்க் அதிகம் பகிரப்படுகிறது. இவற்றின் வாயிலாக, மாணவர்களின் பெயர், கல்வி நிலை, மொபைல் எண், இ - மெயில் முகவரி, வங்கி கணக்கு எண் என, அனைத்து விதமான தகவல்களையும் பெறுகின்றனர்.பின், அவற்றை பயன்படுத்தி சைபர் குற்றங்களில் ஈடுபடவும், வங்கி கணக்கில் இருந்து பணம் திருடவும் வாய்ப்புள்ளது. எனவே, பள்ளி, கல்லுாரி மாணவர்கள், போலி இணையதள லிங்க் அல்லது அழைப்புகளில், தங்களின் தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம் என, சைபர் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.இது குறித்து, சைபர் சொசைட்டி ஆப் இந்தியா அமைப்பின் செயலரும், ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்.பி.,யுமான பாலு சுவாமிநாதன் கூறியதாவது:டிஜிட்டல் சாதனங்கள் வழியே தகவல்களை திருடுவது, 2021க்கு பின் அதிகரித்துள்ளது. போலி வங்கி கணக்கு, இணையதளம், அழைப்புகள் வாயிலாக, மக்களை மோசடி கும்பல் ஏமாற்றுகிறது. தற்போது, அரசின் நலத்திட்டங்கள் பெயரிலும், சைபர் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, இணையதளங்களில் தகவல்களை பகிர்வதற்கு முன், அவை அரசு இணையதளமா என்பதை, மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும்.மோசடி பேர்வழிகள் தாங்கள் திரட்டும் தகவல்களை விற்கவும், அதை பயன்படுத்தி, வங்கி கணக்குகள் மற்றும் முக்கிய ஆவணங்களை, 'ஹேக்' செய்வதற்கும் வாய்ப்புகள் அதிகம். எனவே, மாணவர்கள் விழிப்புடன் இருப்பது அவசியம். சைபர் மோசடியால் பாதிக்கப்படுவோர், 1930 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்