உள்ளூர் செய்திகள்

ஆசிரியர்கள் இல்லாததால் கன்னட பள்ளிக்கு பூட்டு

தங்கவயல்: ஆசிரியர்கள் இல்லாததால், கோப்பேனஹள்ளி அரசு கன்னட நடுநிலைப் பள்ளிக்கு நேற்று கிராமத்தினர் பூட்டுப்போட்டனர். மாணவர்கள், பள்ளி முன் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.கோப்பேன ஹள்ளி கிராமத்தில் 1ம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரையிலான அரசு கன்னட நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 70 மாணவர்கள் படித்து வருகின்றனர். இரண்டு ஆண்டுகளாக ஒரே ஒருவர் தான் ஆசிரியர்; அவரே தான் எல்லா பொறுப்பையும் கவனிக்கிறார்.இரண்டு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள், ஜாதி கணக்கெடுப்புப் பணிக்கு சென்று விடுகின்றனர். கோடை விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. மற்றப்படி வகுப்புகளில் இதுவரை மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படவில்லை.இதை கண்டித்து, கிராமத்தினர் பள்ளிக்கு நேற்று பூட்டுப்போட்டனர். மாணவர்கள் பள்ளி முன் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பெற்றோரும் கலந்து கொண்டனர்.கோப்பேனஹள்ளி கிராமத்தினர் கூறியதாவது:தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளுக்கு அனுப்புங்கள் என்று கோருகின்றனர். ஆசிரியர்களே இல்லாத பள்ளிக்கு, பிள்ளைகளை எப்படி அனுப்ப முடியும்? பிள்ளைகளின் எதிர்க்காலத்தை கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டி உள்ளது.தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்பதற்காகவே கல்வித் துறை அதிகாரிகள், அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டனரோ என்ற சந்தேகம் எழுகிறது. இப்பள்ளியின் அவல நிலையை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலாவிடம் புகார் செய்தோம். ஆனால் எந்த பயனும் கிடைக்கவில்லை.இப்பள்ளிக்கு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இரண்டு நாட்கள் காத்திருப்போம். உரிய நடவடிக்கை எடுக்க தவறினால், வட்டார கல்வி அதிகாரி அலுவலகம் முன் தர்ணா நடத்துவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்