உள்ளூர் செய்திகள்

புத்தகம் படிப்பதில் ஆர்வம் குறையாத வாசகர்கள்

மைசூரு: தசரா புத்தக கண்காட்சியில், 50க்கும் மேற்பட்ட பதிப்பகங்களின் புத்தகங்களை வாங்க, புத்தக பிரியர்கள் குவிந்தனர்.மைசூரு தசரா புத்தக துணை கமிட்டி சார்பில் மாவட்ட கலெக்டர் பழைய அலுவலகம் பின்புறம் உள்ள ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானத்தில் புத்தக கண்காட்சி, விற்பனை நடந்து வருகிறது.மாநிலத்தின் 50க்கும் மேற்பட்ட வெளியீட்டாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் என 93 கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.வாசி ப்பின் மீது ஆர்வம் கொண்ட பலர், எழுத்தாளர்கள் குவெம்பு, சிவராம் காரந்த், எஸ்.எல்.பைரப்பா, பூர்ணசந்திரா தேஜஸ்வி, லங்கேஷ், ரவி பெலகெரே, பானு முஷ்டாக் உள்ளிட்ட தங்களுக்கு பிடித்தமான எழுத்தாளர்களின் புத்தகங்களை தேடித்தேடி வாங்கி சென்றனர்.குவெம்பு பாஷா பாரதி, யக் ஷகானா, ஜனபத அகாடமி, கன்னட புத்தக ஆணையம், கன்னட சாகித்ய பரிஷத், மைசூரு ஜனபத பல்கலைக்கழகம், ஹம்பி பல்கலைக்கழக அச்சகம் ஆகியவற்றால் வெளியிடப்பட்ட பல புத்தகங்கள் குறித்து ஆராய்ச்சி மாணவர்கள், அறிஞர்கள் கலந்துரையாடல் நடந்தது.சில பதிப்பகங்கள், தங்கள் வெளியீடுகளுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி அளித்துள்ளதால், வாசகர்கள் கைநிறைய புத்தகங்களை அள்ளி செல்கின்றனர். அக்., 1ம் தேதி வரை நடக்கும் இந்த கண்காட்சியில் தினமும் மாலை 4:30 மணிக்கு எழுத்தாளர்களுடன் 'செல்பி' நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அத்துடன், பல்வேறு குழுக்களின் கலாசார நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.இதே வேளையில் கன்னட மொழியை பிரபலப்படுத்தும் வகையில், பெங்களூரை சேர்ந்த 'கர்நாடக பால் என்ற ஸ்டார்ட்அப்' நிறுவனம் ஈடுபட்டு உள்ளது. கண்காட்சிக்கு வரும் புத்தக பிரியர்களிடம், கன்னட கலாசாரம்.வரலாறு, கலை, இலக்கியம், திரைப்படங்கள், புத்தகங்கள் பற்றிய தகவல்களை அச்சிடப்பட்ட டி - ஷர்ட்கள் உட்பட பொருட்களை விற்பனை செய்கின்றனர். இது மக்களின் கவனத்தை ஈர்த்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்