ஆர்.டி.ஐ., மனுக்களை தினசரி பரிசீலிக்க உத்தரவு
கோவை: பள்ளிக்கல்வித் துறையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.ஐ.,) கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கான தகவலை இணையத்தின் வழியாகவே, உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.முன்னதாக, அனைத்து மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகங்கள் (இடைநிலை), மேலும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பொதுத் தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு பொதுத் தகவல் அலுவலரும், தங்களுக்கு வழங்கப்பட்ட பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை தினசரி உள்ளீடு செய்து https://rtionline.tn.gov.in/RTIMIS/NODAL/index.php என்ற இணையதள இணைப்பில், ஆர்.டி.ஐ., கீழ் வந்துள்ள மனுக்கள் மற்றும் மேல்முறையீட்டு மனுக்களைப் பதிவிறக்கம் செய்து, அவற்றிற்கு உரிய தகவலை இணையத்தின் மூலமாகவே வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இத்தகவல்களை பதிவு செய்வதற்கென தனி பதிவேடு பராமரிக்கவும், ஒவ்வொரு மாதமும் 5ம் தேதிக்குள் உயர் அலுவலருக்கு அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கைகளை தொகுத்து, முதன்மைக் கல்வி அலுவலர் 10ம் தேதிக்குள் மேலதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.