உள்ளூர் செய்திகள்

அரசு மருத்துவ கல்லுாரியில் காலாண்டு கூட்டம்

ஊட்டி: ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரியில், நுகர்வோர் காலாண்டு கூட்டம் நடந்தது.அதில், கல்லுாரி முதல்வர் ஸ்ரீ சரவணன் தலைமை வகித்து பேசியதாவது:அரசு மருத்துவ கல்லுாரியில் தற்போது, 22 துறைகள் வாயிலாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விலை உயர்ந்த மருந்துகள் வாங்க இயலாத நிலையில், வேறு மாவட்ட மருத்துவ கல்லுாரிக்கு பரிந்துரை செய்து, சிகிச்சை பெறுவது குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.வெளி நோயாளிகள் காலை, 9:30 மணி முதல், 1:30 மணி வரையும், உள் நோயாளிகளுக்கு காலை, மாலை மருத்துவர் கண்காணிப்பில் பரிசோதனை மேற்கொண்டு வருகிறது. சாதாரண நோய்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களை மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். மேல் சிகிச்சைக்காக இங்கு வருபவர்களுக்கு கூடுதல் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.நாள்தோறும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள், 400க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் இங்கு சிகிச்சை பெறுகின்றனர். தினசரி ஒரு வண்ணம் என்ற அடிப்படையில் பெட்ஷீட், தலையணைகள் மாற்றப்படுகின்றன.தற்போது, ஆயிரம் மாணவர்கள் இளநிலை மருத்துவம் பயின்று வருகின்றனர். அரசு விதிமுறைகள் படி, தேவைக்கேற்ப பிரிவுகள் செயல்பட்டு வருவதால், பெரும்பான்மையான சிகிச்சை இங்கு வழங்கப்படுகிறது.'அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் , சிடி ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன்' ஆகியவை, அரசு நிர்ணயித்த கட்டண அடிப்படையில், முன்னுரிமை மற்றும் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்படுகிறது. தினசரி மூன்று முறை கழிவறைகள் சுத்தம் செய்யப்படுகிறது.மக்கள் ஒத்துழைப்பு குறைவாக உள்ளதால், கழிவறைகளில் மது பாட்டில்கள், நாப்கின் பேடுகள் போன்றவை போட்டு வைப்பதால், அடைப்புகளால் சிரமம் ஏற்படுகிறது. இனி தவிர்க்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.இட வசதி கிடைக்கும் பட்சத்தில், தாய், சேய், குழந்தைகள் பிரிவு மருத்துவ கல்லுாரி வளாகத்தில் அமைக்கப்படும். நோயாளிகள் சிகிச்சைக்கு வரும்போது காப்பீட்டு அட்டையை எடுத்து வந்தால் கூடுதல் சிகிச்சைக்கு பயன் அளிக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.இருப்பிட மருத்துவ அலுவலர் ரவிசங்கர், மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து நுகர்வோர் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்