அரசின் விலையில்லா சைக்கிள் மாணவர்களுக்கு வினியோகம்
மடத்துக்குளம்: குமரலிங்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.நிகழ்ச்சியில், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் தனலட்சுமி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், 72 மாணவியர், 63 மாணவர்கள் என 135 அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது.பள்ளியின் தலைமையாசிரியர் மாரியப்பன், உதவித் தலைமையாசிரியர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். பொறுப்பாசிரியர்கள் ரமேஷ், மகுடீஸ்வரன் ஏற்பாட்டினை செய்திருந்தனர்.மேலும், வளர் இளம் மாணவியருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியும் பள்ளியில் நடந்தது. வளர் இளம் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து யோகா மாஸ்டர் ரேவதி மற்றும் மனநல ஆலோசகர் நிவேதிதா பேசினர்.நிகழ்ச்சியில், 75 மாணவியருக்கு பெண்ணியல் சார்பு தொகுப்பு வழங்கப்பட்டு, அதனை பயன்படுத்தும் முறைகள் பற்றியும், சுகாதார நலன் குறித்தும் விளக்கப்பட்டது. ஆசிரியர் அலமேலுமங்கை நன்றி தெரிவித்தார்.