சுயமாக தீர்வுகாண பழகுங்கள் பிறகே ஏ.ஐ.,!
மாணவர்கள், ஆரம்பத்திலேயே ஏ.ஐ., கருவிகளை அதிகம் சார்ந்திருக்கக் கூடாது. மாறாக, கணிதம், இயற்பியல், எழுத்து மற்றும் தகவல் தொடர்பு போன்ற அடிப்படை பாடங்களில் சுயாதீனமாக தேர்ச்சி பெறுவதில் முதலில் கவனம் செலுத்த வேண்டும்.எந்த ஒரு சிக்கலுக்கும் தீர்வுகாண நேரடியாக ஏ.ஐ., பயன்படுத்துவது உகந்தது அல்ல; தன்னைத்தானே சவாலுக்கும், போராட்டத்திற்கும் உட்படுத்திக்கொண்டு சுயமாக தீர்வுகாண முதலில் பழக வேண்டும். அடிப்படைகளில் தேர்ச்சி பெற்று திறமையை வளர்த்துக்கொண்ட பிறகு, மீண்டும் மீண்டும் செய்யும் பணிகளுக்கும், மேம்பாட்டிற்கும் ஏ.ஐ., கருவிகளை பயன்படுத்தலாம். உதாரணமாக, எண்கணிதத்தில் தேர்ச்சி பெற்ற பிறகே, நாம் கால்குலேட்டரை பயன்படுத்துவதை துவங்குவதைப் போலத்தான் ஏ.ஐ.,யையும் பயன்படுத்தவேண்டும்.ஆனால், ஏ.ஐ., எதிர்காலத்தை தற்போது கணிப்பது சவாலான ஒன்று. கணிதம் மற்றும் 'கோடிங்' போன்ற சரிபார்க்கக்கூடிய களங்களில் ஏ.ஐ., சிறந்து விளங்கியுள்ளது. ஆனால், சட்டம் மற்றும் இயற்பியல் போன்ற களங்களில் முன்னேற்றம் மெதுவாகவே இருக்கும்.இளம் மாணவர்களிடையே அபரிமிதமான ஆற்றல் மற்றும் திறமையுடன் ஏ.ஐ., வளர்ச்சியில் இந்தியா ஒரு முக்கிய நாடாக உயர்ந்துள்ளது. எனினும், திறன்மிக்கவர்கள் அதிகளவில் வெளிநாடுகளுக்கு செல்வதால், திறமையாளர்களை உள்நாட்டிலேயே தக்க வைத்துக்கொள்வது சற்று சவலாகவே அமையும். கணினி, உள்கட்டமைப்பு, ஆராய்ச்சி மற்றும் மனத வளங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவது, இந்தியா செழிப்படைய உதவும்.குறிப்பாக, இந்தியாவால் பயன்பாட்டு ஏ.ஐ.,யில் அதிகளவில் பிரகாசிக்க முடியும். ஐ.டி., உள்கட்டமைப்பின் அனுபவத்தைப் பயன்படுத்தி ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு ஏ.ஐ., பயன்பாடுகளை உருவாக்குதல் என்பது, வேறு எந்த நாடும் எளிதில் செய்ய முடியாத சாதனையாகும்.வரும்காலங்களில் ஏ.ஐ., இன்னும் அபரிமிதமான வளர்ச்சியை அடையும் என்பதில் சந்தேகம் இல்லை. சிறந்த ஏ.ஐ., கருவிகளால் ஆராய்ச்சியை துரிதப்படுத்த முடியும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு மாற்றான ஒன்றாக ஏ.ஐ., உடனடியாக அமையாது என்பது எனது கருத்து. எனினும், 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்நிலை மாறலாம்.ஏ.ஐ.,யின் வளர்ச்சி, வேலை வாய்ப்புகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கருத்து பரவலாக உள்ளது. அமெரிக்க சந்தையில் 'உங்களது பிராண்டை உருவாக்குங்கள்' என்று சொல்வதுண்டு. உதாரணமாக, உங்களுக்கு என்று ஒரு பிரத்யேக இணையதளத்தை உருவாக்கி, நீங்கள் யார் என்பதையும், உங்களது திறமை எவை என்பதையும், உலகம் அறியும் வகையில் செய்ய வேண்டும். வருங்கால சந்ததியனருக்கான பொருளாதாரம், சுவாரஸ்யமான வேலை வாய்ப்பு ஆகியவற்றை அறிய நானும் ஆர்வமாக உள்ளேன்.-சூர்யா கங்குலி, பேராசிரியர், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம், அமெரிக்கா.