ஆறு மாத உச்சத்தில் வேலையின்மை விகிதம்
புதுடில்லி: இந்தியாவில் வேலையின்மை விகிதம் கடந்த ஏப்., மாதத்தில் 5.20 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அதிகபட்சம் என, மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலையின்மை, முந்தைய மார்ச் மாதத்தில் 5.10 சதவீதமாக இருந்தது.கிராமப்புறங்களில் வேலையின்மை விகிதம் அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணம்.இது, மார்ச் மாதத்தில் 4.30 சதவீதமாக இருந்த நிலையில், ஏப்ரலில் 4.60 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், நகர்ப்புற வேலையின்மை விகிதம் 6.80 சதவீதத்தில் இருந்து 6.60 சதவீதமாக சற்றே குறைந்துள்ளது. நகர்ப்புற ஆண்களிடையே வேலையின்மை 5.90 சதவீதமாகவும்; பெண்களிடையே 8.50 சதவீதமாகவும் குறைந்துள்ளது.ஏப்ரல் மாதத்தில் ஒட்டுமொத்த ஆண்களுக்கான வேலையின்மை விகிதம் 5.10 சதவீதமாகவும், பெண்களுக்கான வேலையின்மை விகிதம் 5.40 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.