கல்வித்துறை முன்னேற்றத்திற்கு வழி காட்டுகிறது தினமலர்
சென்னை: "தினமலர், மாணவர்களுக்கு வழிகாட்டுவதுடன், ஒட்டுமொத்த கல்வித்துறை முன்னேற்றத்திற்கும் வழி காட்டுகிறது,'' என்று 'ஜெயித்துக்காட்டுவோம்' நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு புகழாரம் சூட்டினார். சென்னை மாநகராட்சியின், சென்னை பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கான தினமலர் "ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சி, சென்னை பல்கலை நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடந்தது. பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவியர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது: இது தலையா, கடல் அலையா, இல்லை தேன் அடையா என தெரியாத அளவிற்கு மாணவச் செல்வங்கள் பூத்துக் குலுங்கியிருப்பதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பொதுவாக, நாங்கள் அரங்கு நிறைந்த காட்சிகளைத் தான் பார்ப்பதுண்டு. ஆனால், "தினமலர்' நடத்தும் அரங்கு நிரம்பி வழியும் காட்சியை இங்குதான் பார்க்கிறேன். அரங்கில் மட்டுமில்லாமல், அரங்கிற்கு வெளியேயும் மாணவர்கள் அதிகளவில் இருப்பதை பார்த்தேன். ஆசிரியர்கள் பொதுவாக படி, படி என்று கூறுவார்கள். அதனாலோ என்னவோ, உள்ளே இடம் கிடைக்காமல் அரங்கத்தின் வாயில் படிகளில் கூட மாணவர்கள் உட்கார்ந்துகொண்டு குறிப்பெடுப்பதை நான் வரும்போது பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். இதைப் பார்க்கும்போது, நீங்கள் அனைவரும் கண்டிப்பாக ஜெயித்துக் காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. "தினமலரின்' பெருமை: "தினமலர்' இந்த, "ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சியை நடத்தி வருவது சாதாரண காரியமல்ல. 15 ஆண்டுகளுக்கு முன்பே இந்த திட்டத்தை முதன் முதலில் துவக்கிய பெருமை "தினமலர்' நாளிதழுக்கு உள்ளது. அதேபோல், அந்நிகழ்ச்சியை தொடர்ச்சியாக ஆண்டுதோறும் வெற்றிகரமாக நடத்திவருகின்ற பெருமையும் "தினமலர்' நாளிதழுக்கு உண்டு. இப்படிப்பட்ட நிகழ்ச்சியில் இரண்டாவது முறையாக நான் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததைக் கண்டு, மிகவும் பெருமைப்படுகிறேன்; இதில் பங்கேற்பதை மிகவும் கவுரவமாக கருதுகிறேன். ஆக்கப்பூர்வமான விமர்சனம்: நான் காலையில் தினமும் தவறாமல் "தினமலர்' நாளிதழை படிப்பேன். அப்படி படிக்கும்போது, அதில் மாணவர்களாகிய உங்களுக்கு மட்டுமல்ல; எங்கள் துறைக்கும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கும் அளவிற்கு பல்வேறு அற்புதமான செய்திகளைக் காண்கிறேன். கல்வித்துறையின் முன்னேற்றத்திற்காக, பல்வேறு குறைகளை சுட்டிக்காட்டி, செய்திகளாக வருகின்றன. அதை நாங்கள் கவனிக்காமல் இல்லை. குறிப்பாக, நாங்கள் சமச்சீர் கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியதும், அந்த திட்டம் எப்படி வர வேண்டும், என்னென்ன அம்சங்கள் அதில் இடம்பெற வேண்டும் என்பது குறித்து, "தினமலர்' நாளிதழில் தினமும் கட்டுரைகள் வந்தன. அதை, பாடத்திட்ட குழுவிடம் கொடுத்து,"எப்படியெல்லாம் ஆக்கப்பூர்வமாக விமர்சனங்கள் வருகின்றன;பார்த்தீர்களா? இதையெல்லாம் உள் வாங்கிக்கொண்டு, தரமான முறையில் பாடத்திட்டத்தை உருவாக்குங்கள்' என்று நான் கூறினேன். "தினமலர்' எந்த அளவிற்கு ஆக்கப்பூர்வமாக செய்திகளை வெளியிடுகிறது என்பதற்கு, இது ஒரு சான்று. "தினமலரில்' பல்வேறு செய்திகள் வருகின்றன. குறிப்பாக, ஒவ்வொரு நாளும் ஒரு பறவையைப் பற்றி விரிவாக கட்டுரை வருகிறது. அதேபோல், பழங்கால சிலைகள் குறித்த செய்திகள் வருகின்றன. இதுபோன்ற செய்திகள், மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும். வெறும் புத்தகத்துடன் தங்களது அறிவை சுருக்கிக்கொள்ளாமல், எல்லாவற்றை பற்றியும் பரந்த அறிவை பெருக்கிக்கொள்ளும் வகையில் மாணவர்கள் படிக்க வேண்டும். முதல்வர் கொடுத்த கொடை: பொதுத்தேர்வு குறித்து, தேவையில்லாமல், "டென்ஷனோ', பட படப்போ அடைய வேண்டாம். நாங்கள் படிக்கும் காலத்தில், தேர்வு மையத்திற்குச் சென்றாலே ஒருவித பட படப்பு இருக்கும். என்ன செய்வதென புரியாமல் தவிப்போம். இதையெல்லாம் புரிந்துகொண்டு தான், தேர்வுக்கு முன் வினாத்தாளை வாசிக்கவும், விடைத்தாளை தேர்வெழுதுவதற்கு தயார்படுத்திக்கொள்ளவும் 15 நிமிடம் வாய்ப்பு கொடுத்தவர் நம் முதல்வர். இது, மாணவ சமுதாயத்திற்கு முதல்வர் கொடுத்த மிகப்பெரிய கொடை. தேர்வெழுதும் மாணவர்களுக்கு நாம் எந்த வகையில் எல்லாம் உதவி செய்ய முடியும் என்பதை எண்ணிப்பார்த்து, இந்த வாய்ப்பை முதல்வர் வழங்கியுள்ளார். நாங்கள் தலை நிமிர்வோம்: ஒரு ஆண்டு படித்ததை, மூன்று மணி நேரத்தில் வெளிப்படுத்த வேண்டும். அதற்கு மாணவர்கள் நல்ல முறையில் தயாராவதற்கு ஏற்ப, இந்த கூடுதல் நேர வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. என்றைக்கு நூறு சதவீத தேர்ச்சியை பெறுகிறோமோ, அன்றைக்குத் தான் நாங்கள் தலை நிமிர்ந்து நடக்க முடியும். உங்களைப் பார்க்கும்போது, நாங்கள் தலை நிமிர்ந்து நடப்போம் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். முன்னதாக, "தினமலர்' ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, அமைச்சரை வரவேற்று பேசினார். கடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 500க்கு 487 மதிப்பெண்கள் பெற்று, சென்னை மாவட்ட அளவில் முதல் இடங்களைப் பெற்ற கிருத்திகா (அமைந்தகரை பள்ளி), சங்கீதா (நுங்கம்பாக்கம் பள்ளி), ஹஷ்புனிஷ்ஷா (சைதாப்பேட்டை பள்ளி), 486 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பெற்ற ஆறுமுகம் (திருவான்மியூர் சென்னை பள்ளி), 483 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பெற்ற விஷ்ணுபிரியா (மடுவங்கரை பள்ளி-கிண்டி), வசந்தகுமாரி (சைதாப்பேட்டை பள்ளி) ஆகியோருக்கு அமைச்சரும், தினமலர் ஆசிரியரும் சேர்ந்து விருதுகளையும், பரிசுகளையும் வழங்கி பாராட்டினர். "மாணவரான' அமைச்சர்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வழக்கமாக அனைவரிடமும் சகஜமாக, அன்பாக பழகும் குணம் உடையவர். மாணவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம்; மாணவர்களோடு மாணவராக மாறி விடுவார். அப்படித்தான், நேற்று நிகழ்ச்சிக்கு மேடைக்கு வந்தபோதும், அதேபோல் புறப்பட்டு செல்லும் போதும் அமைச்சரிடம், மாணவர்களும், மாணவியரும் போட்டி போட்டுக்கொண்டு, அவருக்கு கை கொடுத்து மகிழ்ந்தனர். அமைச்சரும் சலிக்காமல், அனைவரிடமும் கை குலுக்கி மகிழ்ந்தார்.