உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் நூலகத்தை அதிகளவில் பயன்படுத்த வேண்டும்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட மைய நூலகம் சார்பில் 43வது தேசிய நூலக வார விழா நடந்தது. விழாவுக்கு தலைமை வகித்து 18 புதிய நூலக புரவலர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நூலகத்துறையின் சார்பில் மாநில அளவில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி மாவட்ட கலெக்டர் விஜயகுமார் பேசியதாவது:பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்தில் தற்போது 10,507 உறுப்பினர்களும், 151 புரவலர்களும் உள்ளனர். நாளொன்றுக்கு சராசரியாக 300 வாசகர்கள் வந்து செல்கின்றனர். நூல் இரவல் நாளொன்றுக்கு சராசரியாக 150 பேர் பெற்று செல்கிறார்கள். நூலகத்தின் முதல் தளத்தில் நூல் குறிப்புதவி பகுதி நகலெடுக்கும் வசதியுடன் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.இணையதள பிரிவும் வாசகர்களின் பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., முதலான தேர்வுகளுக்குரிய நூல்களை குறிப்பெடுக்கும் வகையில் குடிமைப்பணி பிரிவும் செயல்பட்டு வருகிறது. பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தேவையான அனைத்து பொருள்களிலும் குறிப்பெடுக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு ஏப்ரல் ஒன்னாம் தேதி முதல் உறுப்பினர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் நூல் இரவல் வழங்கப்பட்டு வருகிறது. உறுப்பினர்களால் போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டால் நூல் புதுப்பித்தல் வசதியும் வழங்கப்பட்டு வருகிறது.பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 37 நூலகங்களுக்கு புதிய நூல்களை தொழில் நுட்பப்பணி செய்து ஒவ்வொரு ஆண்டும் புதிய நூல்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களும், கல்லூரி மாணவர்களும் நூலகத்தை அதிக அளவில் பயன்படுத்திட வேண்டும். எந்த அளவிற்கு நூலகத்தை நாம் பயன்படுத்துகிறோமோ அந்த அளவிற்கு நம்முடைய வெற்றி பாதையை அமைத்து கொள்ள முடியும். மாணவர்களுக்கு பள்ளிகளில் குறிப்பிட்ட ஆசிரியர்கள்தான் பணியாற்றுவார்கள் ஆனால் நூலகத்தில் எண்ணற்ற ஆசிரியர்கள் புத்தக வடிவில் உள்ளனர். இவற்றை எல்லாம் நீங்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்