இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் தனியார் கல்லூரிகள் பிரச்சாரம்
சென்னை: பொறியியல் கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவர்களிடம் அண்ணா பல்கலைக் கழக வளாகத்திலேயே, விதிமுறைகளுக்கு புறம்பாக சில தனியார் பொறியியல் கல்லூரிகள் துண்டு பிரசுரங்களை வழங்கி, தங்களது கல்லூரியில் சேருமாறு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பொறியியல் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் ஜூலை 31ம் தேதி துவங்கியது. முதற்கட்ட கவுன்சிலிங்கில் இரண்டு மணி நேர இடைவெளியில் ஆறு பிரிவுகளாக கவுன்சிலிங் நடைபெற்றது. இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் ஒன்றரை மணி நேர இடைவெளியில் எட்டு பிரிவுகளாக கவுன்சிலிங் நடைபெறுகிறது. முதற்கட்ட கவுன்சிலிங்கில் சராசரியாக தினசரி இரண்டாயிரத்து 500 பேர் அழைக்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் சராசரியாக தினசரி மூன்றாயிரம் மாணவர்கள் அழைக்கப்படுகின்றனர். முதற்கட்ட கவுன்சிலிங்கின் முடிவில் அண்ணா பல்கலைக்கழகங்களில் 116 இடங்களும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 32 இடங்களும், தனியார் பொறியியல் கல்லூரிகளில் 46 ஆயிரத்து 692 இடங்களும் காலியாக உள்ளன. முன்னணி தனியார் பொறியியல் கல்லூரிகளில் முக்கிய பாடப்பிரிவுகளுக்கான இடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன. தற்போது இடங்கள் மீதமுள்ள கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க கல்லூரிகளிடையே போட்டி நிலவுகிறது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகள் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறையை காற்றில் பறக்கவிட்டு, பல தனியார் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் குறித்த விவரங்கள் அடங்கிய புத்தகத்தை அண்ணா பல்கலைக்கழகமே தயாரித்து மாணவர்களுக்கு வழங்கியுள்ள நிலையில், தனியார் கல்லூரிகள் தனியாக ஆட்களை நியமித்து, கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவர்களிடம், ‘தங்களிடம் பல வசதிகள் உள்ளன’ என பிரசாரம் செய்து, மாணவர்களை தங்கள் கல்லூரியில் சேர்க்க முயலுகின்றன. அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பிரசாரத்தில் ஈடுபடும் தனியார் பொறியியல் கல்லூரியின் ஆட்களை பிடிக்க ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு கவுன்சிலிங் நடக்கும் இடத்தில் பிரசாரம் செய்யும் நபர்களை பிடித்து கண்டித்து அனுப்பி வருகின்றனர். ஜூலை 31ம் தேதியும் தனியார் பொறியியல் கல்லூரிக்காக பிரசாரத்தில் ஈடுபட்ட இரண்டு நபர்களை அண்ணா பல்கலைக் கழக ஊழியர்கள் பிடித்து, கண்டித்து அனுப்பி வைத்தனர். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெளியே பஸ் நிறுத்தங்களில் நின்றபடி பல தனியார் பொறியியல் கல்லூரிகளின் ஆட்கள் பொறியியல் கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவர்களிடம் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். இத்தகைய நடவடிக்கைகளை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.