பாரதியார் பல்கலையில் மாணவர் சேவை மையம்
கோவை: பாரதியார் பல்கலையில் ‘மாணவர் சேவை மையம்’ வரும் 18ல் துவக்கப்படுகிறது. இந்த மையத்தில் வங்கிகள், தபால் நிலையங்கள், மகளிர் நல மையம், ஸ்டூடியோ, டிராவல் டிக்கெட் புக்கிங் சென்டர் ஆகியவை இடம்பெற்றிருக்கும். தற்போது பாரதியார் பல்கலையின் தொலைதூரக்கல்வி மையத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை உள்ளது. வங்கியில் டி.டி., எடுக்க, பணம் செலுத்த வேண்டுமெனில் அரை கி.மீ., தூரத்துக்கும் மேல் நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதைக்கருத்தில் கொண்டு பாரதியார் பல்கலை ‘மெயின் பில்டிங்’ அருகேயுள்ள கட்டடத்தில் வங்கி அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் பலர், பிற பகுதிகளுக்கு பயணம் செய்ய விமானம், ரயில், பஸ் வசதியை நாடுகின்றனர். எனவே, ‘டிக்கெட் புக்கிங் சென்டர்’ துவக்கப்படுகிறது. இந்த சென்டரில் விமானம், ரயில், பஸ் ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகளை ‘ஆன்லைனில் புக்கிங்’ செய்யலாம். இந்த மாணவர் சோவை மையம் துவக்க விழா வரும் 18ல் நடக்கிறது. இதில் கோவை கலெக்டர் பழனிக்குமார், கோவை விமான நிலைய இயக்குனர் ஹேமலதா, பாரதியார் பல்கலை துணைவேந்தர் திருவாசகம் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.