ஆசிரியர் பற்றாக்குறையை போக்க எம்.சி.ஐ. ஆலோசனை
மருத்துவ முதுநிலை படிப்பில் தனிவகை பிரிவுகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதை சரிசெய்ய, அத்துறைகளின் ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வுகளை அளித்து, மாணவர்களை கவரலாம் என்று எம்.சி.ஐ. பரிந்துரைத்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு எழுதிய குறிப்பில் எம்.சி.ஐ. இவ்வாறு தெரிவித்துள்ளது. அனாடமி, பிசியோலாஜி, பார்மகாலஜி போன்ற துறைகளில் அதிகளவில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. அனாடமி போன்ற பாடங்களில் மருத்துவ பட்டதாரிகளை ஈர்க்க, அவர்களுக்கு கிளீனிக்கள் துறைகளில் பகுதிநேர பணிகளை கொடுக்கலாம் மற்றும் இந்த பிரிவுகளை ஜெனடிக்ஸ் இன் அனாடமி, கிரிமினல் பாரென்சிக் பேதோலாஜி உள்ளிட்ட பல குறுகியகால தனிவகை படிப்புகளோடு இணைத்து செயல்படுத்தலாம். மேலும் அனைத்து இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்களும் சமூகம் சார்ந்த சுகாதார திட்டங்களில் ஈடுபட வேண்டும். சில துறைகளில் பற்றாக்குறை நிலவ, போதுமான விளம்பரமின்மையும் ஒரு காரணம். மேலும் தனியார் மருத்துவ கல்வி நிறுவனங்கள் அடிப்படை தனிவகை படிப்புகளை தொடங்க தயக்கம் காட்டுகின்றன என்பன போன்ற பல விஷயங்கள் பகிரப்பட்டுள்ளன.