உள்ளூர் செய்திகள்

கால்நடை மருத்துவ தரவரிசை பட்டியல்; 15 மாணவர்கள் முழு மதிப்பெண்

சென்னை: கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், 15 மாணவர்கள் கட்-ஆப் மதிப்பெண், 200க்கு 200 எடுத்து சாதனை படைத்து உள்ளனர்.தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ், பி.வி.எஸ்சி., ஏ.ஹெச்., என்ற கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகள் மற்றும் உணவு தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம் என, பி.டெக்., படிப்புகள் உள்ளன.பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் மாணவர் சேர்க்கைக்கு, 17,497 பேர் விண்ணப்பித்து இருந்தனர். தகுதியான மாணவர்களின் தரவரிசை பட்டியல், https://adm.tanuvas.ac.in, https://tanuvas.ac.in என்ற பல்கலையின் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது.இதில், பி.வி.எஸ்சி., ஏ.ஹெச்., படிப்புக்கான தரவரிசை பட்டியலில், 15 மாணவர்கள், 200க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். அவர்களுக்கு வயது அடிப்படையில், முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, விழுப்புரத்தைச் சேர்ந்த திவ்யா முதலிடத்தை பிடித்துள்ளார்.அதேபோல், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அபிஸ்ரீ, விழுப்புரத்தைச் சேர்ந்த சூர்யா ஆகியோர், அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். மேலும் 4 பேர், 199.5 கட் - ஆப் மதிபெண் பெற்றுள்ளனர்.அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில், தர்மபுரியைச் சேர்ந்த அசோக்பிரியன், 199.5 மதிப்பெண் பெற்று முதலிடமும், அதே மாவட்டத்தைச் சேர்ந்த ராகவி, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த உதயகுமார் ஆகியோர், அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளனர்.பி.வி.எஸ்சி., ஏ.ஹெச்., மற்றும் பி.டெக்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்த தேதி விரைவில் அறிவிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு, 044 - 2999 7348 - 2999 7349 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்