அண்ணா பல்கலை தேர்வுகள் ஏப்ரல் 15ம் தேதி துவக்கம்
"சட்டசபை தேர்தலையொட்டி, அண்ணா பல்கலை தேர்வு தேதிகள், இடம் ஆகியவை மாற்றம் செய்யப்பட்டுள்ளன" என, அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறினார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, கிண்டி அண்ணா பல்கலை வளாகத்தில் ஓட்டு எண்ணிக்கை மற்றும் அதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் கமிஷன் மேற்கொள்ள உள்ளது. இதனால், அடுத்த மாதம் 10ம் தேதி துவங்குவதாக இருந்த பல்கலைக் கழக தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும், கிண்டி பொறியியல் கல்லூரி, எம்.ஐ.டி., - அழகப்பா தொழில் நுட்ப கல்லூரி, "ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்ட் அண்ட் பிளானிங்" ஆகியவற்றில், இறுதியாண்டு படிக்கும் பி.இ., - பி.டெக்., மாணவர்களுக்கு, ஏப்ரல் 15ம் தேதி முதல் 27ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும். முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாமாண்டு மாணவர்களுக்கு, ஏப்ரல் 21ம் தேதி முதல் மே மாதம் 10ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும். கிண்டி பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும், அண்ணா ஜெம் பள்ளி வளாகத்தில் தேர்வுகள் நடக்கும். இவ்வாறு மன்னர் ஜவகர் கூறினார்.