மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப வழங்கல் 16-05-11 முதல் தொடக்கம்
சென்னை: அரசு மருத்துவக் கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் 16-05-11 முதல் வழங்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பிற்கான அரசு ஒதுக்கீடு இடங்கள் மற்றும் அரசு பல் மருத்துவக் கல்லூரி, தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் பி.டி.எஸ். பட்டப்படிப்பிற்கான அரசு ஒதுக்கீடு இடங்கள், கவுன்சிலிங் மூலம் நிரப்பப்பட உள்ளன. இவற்றுக்கான விண்ணப்பங்கள் திங்கள் முதல் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் வழங்கப்படுகின்றன. இவ்விண்ணப்ப விற்பனையை, சென்னை மருத்துவக் கல்லூரி டீன் கனகசபை, கல்லூரி கருத்தரங்கில் திங்கள் காலை 10 மணிக்கு துவக்கி வைக்கிறார். விண்ணப்பங்களை பெற விரும்பும் மாணவர்கள், கல்லூரி முதல்வருக்கு ஒரு விண்ணப்பம் எழுதி, அத்துடன் 500 ரூபாய்க்கான டிடி -ஐ இணைத்து பெற்றுக் கொள்ளலாம். டிடி -ஐ &'The Secretary, Selection Committee, Kilpauk, Chennai10&' என்ற பெயரில், ஏதாவதொரு தேசியமய வங்கியில் எடுக்க வேண்டும். எஸ்.சி. - எஸ்.டி. - அருந்ததியர் விண்ணப்பங்களை இலவசமாக பெற, தங்கள் சாதி சான்றிதழின் இரு நகல்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்பிக்க ஜூன் 2ம் தேதி கடைசி நாள். சென்னை மருத்துவக் கல்லூரி டீன் கனகசபை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.