நான் முதல்வன் மதிப்பீட்டு தேர்வு: 315 மாணவ, மாணவியர் பங்கேற்பு
தமிழகத்தில், மத்திய அரசின் யு.பி.எஸ்.சி., தேர்வுக்கு ஊக்கத்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக, முன்னோடி மதிப்பீட்டு தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படும், 1,000 மாணவர்களுக்கு 7,500 ரூபாய் உதவித்தொகையாக பத்து மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. இதன்படி, கரூர் மாவட்டத்தில், கரூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, கரூர் பசுபதிபாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் நான் முதல்வன் மதிப்பீட்டு தேர்வு நடந்தது. மாவட்டத்தில் 479 மாணவ, மாணவியர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர்.அதில், மாநகராட்சி மேல்நிலை பள்ளியில், 156 பேரும், பசுபதிபாளையம் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 159 என மொத்தம் 315 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர்.மேலும், 164 பேர் தேர்வு எழுத வரவில்லை. காலை, 9:00 மணியளவில் தேர்வர்களை தீவிர சோதனைக்கு பிறகே தேர்வு மையத்திற்குள் அனுமதித்தனர்.விண்ணப்பதாரர்கள் தேர்வு கூடத்திற்கு பைகள், புத்தகங்கள் மற்றும் கைபேசி, கால்குலேட்டர், பேஜர், போன்ற மின்னணு சாதனங்களை எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை.