ஒரு லட்சம் ஆசிரியர் வேலைக்கு 40 லட்சம் பேர் விண்ணப்பம்
பாட்னா: பீகாரில் ஒரு லட்சம் ஆசிரியர் வேலைக்கு 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்; இதனால், அரசு திக்குமுக்காடிப் போயுள்ளது. பீகார் உட்பட சில வட மாநிலங்களில் இருந்து படிக்காத இளைஞர்கள் மட்டுமின்றி, படித்த இளைஞர்களும் வேலை தேடி, டில்லி, மும்பைக்கு செல்கின்றனர். ஆனால், சமீபத்தில், ‘மராத்தியர்களுக்கே மகாராஷ்டிராவில் வேலை’ என்ற கோஷத்தை ராஜ் தாக்கரேயின் ‘மகாராஷ்டிர நவ நிர்மாண்’ கட்சி உயர்த்தி, வன்முறையிலும் இறங்கியதை அடுத்து, பீகார் இளைஞர்கள் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டனர். மும்பையில் இனி வேலைவாய்ப்பு இருக்காது என்பதால், பீகாரில் வேலை தேடுவதில் இளைஞர்கள் அதிக தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால், பீகாரில் வேலைவாய்ப்பு குறைவு தான். அதனால், எந்த வேலைக்கு விண்ணப்பம் கோரினாலும், படித்த இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பம் செய்வது வாடிக்கையாகி விட்டது. பீகார் மாநிலத்தில் உள்ள பல அரசு பள்ளிகளில், ஆசிரியர் இடங்கள் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளன. மொத்தம் ஒரு லட்சம் ஆசிரியர்களை நியமிக்க சமீபத்தில் விண்ணப்பம் கோரப்பட்டது. இதற்கு, கடந்த ஒரு வாரத்தில் 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மாநிலம் முழுவதும் கல்வித்துறை சார்ந்த ஒன்பதாயிரம் மையங்களில் விண்ணப்பங்கள் வாங்கப் பட்டன. இதுவரை வந்த 40 லட்சம் விண்ணப் பங்களை பரிசீலிக்க, கூடுதல் பணியாளர்களை நியமிக்க அரசு படாதபாடு படுகிறது. இப்போதுள்ள ஊழியர்களை வைத்து விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கு தாமதம் ஆகும். படித்த இளைஞர்கள் பலரும் ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். பள்ளி இறுதிப்படிப்பை முடித்தால் போதும் என்பதால், விண்ணப்பங்கள் எண்ணிக்கை இன்னும் அதிகரித்தபடி உள்ளன. பள்ளி இறுதிப்படிப்பை முடித்தவர்கள் முதல், முதுநிலை பட்டதாரி மாணவர்கள் வரை விண்ணப்பம் செய்துள்ளனர். பட்டதாரி இளைஞர்களுக்கு நேரடியாக மேல் வகுப்புக்கான ஆசிரியர் பணி அளிக்கப்படுகிறது. மற்றவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. பீகாரில், அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. கடந்த இரண்டாண்டாக ஆசிரியர்களை நியமிக்கும் அதிரடி நடவடிக்கையை முதல்வர் நிதிஷ்குமார் எடுத்து வருகிறார். கடந்தாண்டு ஒரு லட்சத்து 36 ஆயிரம் ஆசிரியர்களை நியமித்தார். இரண்டாவது கட்டமாக ஒரு லட்சம் பேரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள் ளது. இவர்களை நியமித்த பின்னும், இன்னும் இரண்டு லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.