பள்ளி கூரை இடிந்து விழுந்து 7 குழந்தைகள் உயிரிழப்பு
ஜலாவர்: ராஜஸ்தானில், அரசு நடுநிலைப் பள்ளியின் சிமென்ட் கூரை இடிந்து விழுந்ததில், 7 குழந்தைகள் உயிரிழந்தனர்; 32 பேர் காயமடைந்தனர்.ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டம், தங்கிபுரா காவல் எல்லைக்கு உட்பட்ட பிப்லோட் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. நேற்று வழக்கம்போல் பள்ளி துவங்கியதும், காலையில் இறைவணக்கம் நடந்து கொண்டிருந்தது. 60 மாணவ - மாணவியர் பள்ளியில் இருந்தனர்.அப்போது பள்ளி கட்டடத்தின் சிமென்ட் கூரையின் ஒருபகுதி திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் பலர் சிக்கிக்கொண்டனர். அனைத்து குழந்தைகளும் 8 முதல் 11 வயதுக்கு உட்பட்டவர்கள். ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து உடனடியாக மீட்புப் பணியில் இறங்கினர்.மாநில பேரிடர் மீட்புப்படையினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். இந்த விபத்தில் சிக்கி ஏழு மாணவர்கள் உயிரிழந்தனர். காயமடைந்த 32 பேரில் இருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, பள்ளியின் கூரை இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இந்தப் பள்ளிக் கட்டடம் ஏற்கனவே பாழடைந்த நிலையில் இருந்ததாகவும், இது தொடர்பாக முன்னதாகவே மாவட்ட நிர்வாகத்தில் புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை என்றும் பிப்லோட் கிராம மக்கள் குற்றஞ்சாட்டினர்.விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.