டிஜிட்டல் கிராப் சர்வே பணிகள் 88 சதவீதம் நிறைவு
தேனி: மாவட்டத்தில் கல்லுாரி மாணவர்கள், வேளாண் துறையினர் இணைந்து நடத்திய டிஜிட்டல் கிராப் சர்வே பணிகள் 88 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள சர்வே பணிகளை துறை அலுவலர்கள் மூலம் முடிக்க உள்ளதாக வேளாண்துறையினர் தெரிவித்தனர்.தமிழகத்தில் உள்ள அனைத்து விளைநிலங்களிலும் எந்த வகை பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்பதை அறியவும், இயற்கை பேரிடர் காலங்களில் பாதிப்பை எளிதாக கண்டறியவும் டிஜிட்டல் கிராப் சர்வே பணிகள் துவங்கப்பட்டன.இது கூடுதல் பணிசுமை, போதிய கருவிகள் வழங்கவில்லை என கூறி வி.ஏ.ஓ.,க்கள் டிஜிட்டல் கிராப் சர்வே பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கல்லுாரி மாணவர்களுடன் இணைந்து வேளாண், தோட்டக்கலை,வேளாண் பொறியியல் துறை இப்பணி மேற்கொண்டனர்.மாவட்டத்தில் 4.60 லட்சம் சர்வே உட்பிரிவுகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் கணக்கிட வேண்டி இருந்தது. இப்பணியில் வேளாண் துறையினருடன் இணைந்து கல்லுாரி மாணவர்கள் நவ.,9 முதல்16 வரை சர்வே பணியில் ஈடுபட்டனர்.இதில் 4.07 லட்சம் சர்வே உட்பிரிவுகள் கணக்கிடப்பட்டுள்ளன. அதாவது 88 சதவீத கிராப் சர்வே பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள 12 சதவீத பணியினை வேளாண், தோட்டக்கலை உள்ளிட்ட துறை அலுவலர்களை கொண்டு விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.