போலீஸ் ஸ்டேஷனுக்கு மாணவியர் களப்பயணம்
சட்டம் - ஒழுங்கு, குற்றத்தடுப்பு, போக்குவரத்து விதிமுறைகள் பற்றி போலீசார் மாணவியருக்கு விளக்கினர். எவ்வகையான பாடத்திட்டத்தை பின்பற்றுவது என்பது தொடர்பாக இன்னும் தெளிவுபடுத்தப்படாத காரணத்தால், பள்ளிகளில் அடிப்படை கல்வி நடத்தப்படுகிறது. வாரத்தில் ஒரு நாள் களப்பணியாக அருகில் உள்ள மருத்துவமனை, காவல் நிலையம், தபால் நிலையம், வங்கி, ஏ.டி.எம்.,களுக்கு அழைத்துச் சென்று, அவற்றின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியரில் 38 பேர், களப்பணியாக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ., ராஜசேகரன் ஆகியோர், சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு குற்றத்தடுப்பு தொடர்பாக விளக்கினர். அப்போது, அவர்கள் கூறுகையில், போலீசாரை பார்த்து மாணவியர் பயப்படக்கூடாது. அனைவருக்கும் சட்டம் பொதுவானது. சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டால், தைரியமாக எங்களுக்கு தகவல் அளிக்கலாம். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்போம். குற்றச்சம்பவங்கள் நடக்காமல் இருக்க விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வீடுகளுக்கு அருகில் வசிப்பவர்கள் தொலைபேசி, மொபைல் எண்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆபத்தான நேரங்களில் அவர்களை தொடர்பு கொண்டு உதவி கோரலாம். சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் யாராவது சென்றால் எங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று வலியுறுத்தினர். போக்குவரத்து விதிமுறை குறித்து போக்குவரத்து எஸ்.ஐ., செந்தில்பிரபு விளக்கினார். மாணவியருடன் ஆசிரியை மதிமாலா, பிரைட்டர்ஸ், பியூலா ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.