உள்ளூர் செய்திகள்

ஐந்தாண்டு சட்டப்படிப்பு கவுன்சிலிங் துவங்கியது

தமிழகத்தில் உள்ள 6 சட்டக் கல்லூரிகளில், பி.ஏ.,பி.எல்., ஐந்தாண்டு சட்டப் படிப்பு சேர்க்கை கவுன்சிலிங், சட்ட பல்கலையில் நேற்று துவங்கியது. மொத்தம் உள்ள 1,052 இடங்களுக்கு, 2,686 பேர் விண்ணப்பித்துள்ளனர். கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில், 100க்கு, 98.05 மதிப்பெண்கள் எடுத்த கார்த்தி கிருஷ்ணா முதல் இடத்தையும், 97.75 மதிப்பெண்கள் எடுத்த வள்ளியம்மை இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். இவர்கள் இருவரும், கோவை அரசு சட்டக் கல்லூரியை தேர்வு செய்தனர். 97.12 மதிப்பெண்கள் எடுத்த சல்மான்கான், 96.62 மதிப்பெண்கள் எடுத்த செல்வபிரியா ஆகியோர் சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியையும் தேர்வு செய்தனர். மேலும், 96.05 மதிப்பெண்கள் எடுத்த கலையரசி, திருச்சி அரசு சட்டக் கல்லூரியை தேர்வு செய்தனர். இவர்கள் அனைவருக்கும், சட்டத்துறை அமைச்சர் செந்தமிழன், சேர்க்கைக்கான உத்தரவுகளை வழங்கினார். கவுன்சிலிங், தொடர்ந்து 9ம்தேதி வரை நடக்கிறது. கவுன்சிலிங்கின் இறுதி நாளில் காலியிடங்கள் இருந்தால், காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்கு, தனியாக கவுன்சிலிங் நடைபெறும் என, பல்கலை பதிவாளர் கோபால் தெரிவித்தார். தமிழகத்தில், அரசு சட்டக் கல்லூரிகள் 6 உள்ளன. சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் 241 இடங்கள், மதுரை கல்லூரியில் 171 இடங்கள், திருச்சி, கோவை, நெல்லை, செங்கல்பட்டு ஆகிய இடங்களில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில், தலா 160 இடங்கள் என மொத்தம், 1,052 இடங்கள் உள்ளன. இதில், ஓ.சி., பிரிவின் கீழ் 306 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பிரிவு வாரியாக அமலில் உள்ள இட ஒதுக்கீட்டு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும், சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி ஓ.சி., பிரிவுக்கு மட்டும், கூடுதலாக 50 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், பதிவாளர் கோபால் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்