மாணவர் விடுதியில் அமைச்சர் ஆய்வு
கோவை வந்த தமிழக பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முகமது ஜான், மாணவர் விடுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். சூலூரில் 51.46 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மாணவர் விடுதி மற்றும் சிங்காநல்லூரில் உளள மாணவியர் விடுதியை அமைச்சர் முகமது ஜான் பார்வையிட்டார். சிங்காநல்லூர் விடுதியில் மாணவியருக்கு வழங்கப்படும் உணவு வகைகள் குறித்து வார்டனிடம் கேட்டறிந்தார். அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் இருப்பு மற்றும் தண்ணீர் வசதி குறித்து ஆய்வு செய்தார். மதிய உணவுக்காக சமைத்து தயாராக வைக்கப்பட்டிருந்த சாப்பாடு, சாம்பார் ஆகியவற்றை ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த மாணவியரிடம், "சாப்பாடெல்லாம் நல்லா டேஸ்ட்டா இருக்கா...? ஏதாவது குறை இருந்தா சொல்லுங்க.." என்றார். அதற்கு மாணவியர், "நீங்களே சாப்பிட்டு பாருங்க சார்..." என்றனர். பதிலளித்த அமைச்சர், "மாணவர் விடுதிகளை ஆய்வு பண்ணும்போது சமையலறைக்குப் போய் சாப்பிட்டு பார்க்கணும்னு சீயெம் சொல்லிருக்காங்க. ஆனா, இன்னிக்கு நான் நோன்புங்கறதால சாப்பிட முடியாது... சாரி. அதைத் தவிர வேறு எந்த கோரிக்கைன்னாலும் கேளுங்க, செஞ்சுத் தர்றேன்," என்றார்.