புற்றுநோயை கல்வியால் வென்றுவரும் மாணவன்
சிறிய காய்ச்சலுக்கே பள்ளிக்குச் செல்லாமல் விடுப்பு எடுக்கும் மாணவர்களுக்கு மத்தியில், எலும்பு புற்றுநோய் தாக்கியும், அதை பொருட்படுத்தாமல் பள்ளிக்குச் சென்று 10ம் வகுப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். 15 வயதாகும் சக்தி சிங்கிற்கு கடந்த ஆண்டில் கடுமையான உடல் வலி ஏற்பட்டு, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டாதில், எலும்பு புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. இந்தோ-திபெத் எல்லைப்பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிளாக இருக்கும் சக்தி சிங்கின் தந்தை மகேந்திர சிங்கின் பணி நிமித்தமாக ராஜஸ்தான் மாநிலம் சுருவில் தங்கியுள்ளனர். அவ்வப்போது கீமோதெரபி சிகிச்சை செய்து கொள்ள டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று வந்து கொண்டிருந்தான். நோயினால் ஏற்படும் வலியும், சிகிச்சைக்காக செல்லும் பயண வலியும் சக்தி சிங்கின் கல்வி ஆர்வத்தை எந்த வகையிலும் குறைக்கவில்லை. எப்போதும் போல பள்ளிக்குச் சென்று வந்த சக்தி சிங், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 88 விழுக்காடு மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளான். தொடர்ந்து படிக்கும் ஆர்வம் உள்ள சக்தி சிங்கிற்கு, எய்ம்ஸ் மருத்துவமனையில், கால்களில் உள்ள புற்றுநோய் திசுக்களை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. நோயோ, அதனால் ஏற்படும் வலியோ, கல்வியை தோற்கடிக்க முடியவில்லை. கல்வியின் மீது கொண்ட ஆர்வத்தினால், நோயை வென்று வருகிறார் சக்தி சிங்.