உள்ளூர் செய்திகள்

‘கல்வி முறையை மறுசீரமைப்பது அவசியம்’

கோவை: “கல்வி முறையை மறுசீரமைப்பது பற்றி சிந்திப்பது அவசியம்,” என, பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசினார். கோவை, நீலகிரி மாவட்ட மெட்ரிக் பள்ளி முதல்வர்களின் கல்வி குழுமம் சார்பில் விருது வழங்கும் விழா, ஆர்.எஸ்.புரம் பாரதிய வித்யாபவன் கலையரங்கில் 29ம் தேதி நடந்தது. இதில், கோவை மண்டல மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் காளியண்ணன் பேசியதாவது: எந்தச்சூழலிலும் மாணவ, மாணவியர் மனம் தளரக்கூடாது. தைரியம் இருந்தால் தான் பிரச்னைகளை எளிதாக எதிர்கொள்ள முடியும்; சோதனையை சாதனையாக மாற்ற முடியும். மாணவர்களின் எண்ணங்களை திசைதிருப்ப ஏராளமான ஊடகங்கள் உள்ளன. தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்தினால் மாணவர்கள் உருப்படுவர். தொலைக்காட்சியில் வரும் பல நிகழ்ச்சிகள், இளம் உள்ளங்களை கெடுத்துக் கொண்டிருக்கின்றன. மாணவர்களை திசை திருப்ப நடக்கும் சூழ்ச்சியில் ஏமாந்து விழுந்து விடக்கூடாது. நாட்டுப்பற்று இல்லாத மனிதன் ஜடம். தாய் மற்றும் தாய் மொழிக்காக நம்மை அர்ப்பணிக்க வேண்டும். இன்றைய சூழலில் மாணவர்கள் புத்தங்கள் படிப்பதேயில்லை. அவர்கள், சினிமாக்காரர்களுக்கு அடிமைகளாக இருக்கின்றனர். இவ்வாறு காளியண்ணன் பேசினார். கோவை பாரதிய வித்யாபவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசியதாவது: சுதந்திரத்துக்குப்பின் அரசியலில், பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், கல்வி முறையில் மட்டும் மாற்றம் ஏற்படவேயில்லை. அரசியல், மீடியா என எல்லாமும் மாற வேண்டும் என்று விரும்புகிறோம்; ஆனால், நாம் மட்டும் மாறிக் கொள்வதில்லை. மதிப்பெண், ரேங்கிங், வேலை என்ற மூன்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ளது இன்றைய கல்வி முறை. இதோடு முடிந்து விடவில்லை கல்வியின் தூரம்; இன்னும் சாதிக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு கல்வி நிறுவனங்களுக்கும் தொலைநோக்குப்பார்வை இருப்பது அவசியம். இதற்கான ஆவணங்களை தயார் செய்ய வேண்டும். நமது கல்வி முறையை மறுசீரமைப்பு செய்வது பற்றி சிந்திப்பது அவசியம். இவ்வாறு கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசினார். பின், பிளஸ் 2 பொதுத்தேர்வு, மெட்ரிக் தேர்வுகளில் மாநில அளவில், மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்கள், சிறந்த மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு கல்வி விருது வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்