கோவை மாணவர்கள் அமெரிக்கா பயணம்
சென்னை: "எல்லாம் சாத்தியம் என்பதை மாணவர்கள் ஞாபகத்தில் கொள்ளவேண்டும்" என, நாசா செல்லும் மாணவர்களுக்கு சென்னையில் உள்ள அமெரிக்க தூதர் அறிவுரை கூறினார். கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 50 பேர், தங்கள் அறிவியல் திறனை மேம்படுத்திக் கொள்ள, அமெரிக்காவில் உள்ள, நாசா கென்னடி விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அமெரிக்கா புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், சென்னையில் உள்ள அமெரிக்க தூதர் ஜெனிபர் மெக்ன்டையர் பேசியதாவது: அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் உங்கள் அனைவருக்கும் சில தார்மீக பொறுப்புகள் உள்ளன. எல்லாம் சாத்தியம் என்பதை நீங்கள் ஞாபகத்தில் கொள்ள வேண்டும். வருங்கால விஞ்ஞானிகளான நீங்கள், முடியாததையும் முடித்துக் காட்ட வேண்டும். கூச்சத்தை விட்டொழித்து, அமெரிக்கர்களிடம் சகஜமாக பழக வேண்டும். இந்திய நாட்டின் சிறப்பியல்புகளை நீங்கள் அமெரிக்கர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இந்த மறக்க முடியாத பயணத்தின் ஒவ்வொரு வினாடியையும் ரசித்து அனைவருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். இவ்வாறு ஜெனிபர் மெக்ன்டையர் பேசினார்.