தட்டச்சு பயிற்சிக்கு முக்கியத்துவம் குறையவில்லை
சென்னை மாவட்ட வணிகவியல் பள்ளிகள் சங்கத்தின் 43வது ஆண்டு விழா மயிலாப்பூரில் நடந்தது. இதில், சென்னையிலுள்ள தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயிற்சி மையத்தின் நிறுவனர்கள் கலந்து கொண்டனர். 25 ஆண்டுகளுக்கு மேலாக தட்டச்சு பள்ளியை நடத்தி வருபவர்களுக்கும், குறுகிய கால பயிற்சியை முடித்தவர்களுக்கும், சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, சிறப்பிக்கப்பட்டனர். தற்போதைய தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயிற்சி குறித்து, மக்களிடம் உள்ள விழிப்புணர்வு மற்றும் கணினிக்கும், தட்டச்சுக்கும் உள்ள தொடர்பு குறித்து விளக்கிப் பேசிய சங்க அமைப்பாளர் சந்தான கிருஷ்ணன், "தமிழகத்தில் 60 ஆயிரம் பேர் தட்டச்சு தேர்வு எழுதுகின்றனர் என்றால், மற்ற மாநிலங்களில் 10 முதல் 15 ஆயிரம் பேரே எழுதுகின்றனர். இதற்கு கணினிக்கு ஏற்ப தட்டச்சு பாடத்திட்டத்தை மாற்றியதே காரணம். இதன்மூலம், 1998ல் தட்டச்சு பயின்றவர்களின் எண்ணிக்கை அளவிற்கே, இப்போதும் பயிலுகின்றனர். கணினியை வேகமாகவும், திறமையாகவும் இயக்க தட்டச்சு பயிற்சி உதவுகிறது. தட்டச்சு தெரிந்தவர்கள் மட்டும் தான் சிறந்த கணினி பயிற்சியாளராக வர முடியும்" என்றார்.