பயன்பாட்டு அறிவியல் சார்ந்த படிப்புகள்
அடிப்படை அறிவியலுக்கும், பயன்பாட்டு அறிவியலுக்கும் வேறுபாடு உள்ளது. அறிவியலைப் பயன்படுத்தி எதிர்கொள்ளும் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதே பயன்பாட்டு அறிவியல். வழக்கமான படிப்புகளில் இருந்து பயன்பாட்டு அறிவியல் சார்ந்த படிப்புகள் வேறுபட்டு நிற்கின்றன. அப்படிப்புகள் சவால்களையும், வாய்ப்புகளையும் ஒரு சேர வரவேற்பவர்களுக்கு பிடித்தமான துறையாக இருக்கின்றன. அப்படிச் சில படிப்புகள் கீழே தொகுக்கப்படுகின்றன. PG Diplomo OF Associateship of National Sugar Institute(Sugar Engineering) சர்க்கரை உற்பத்தி தொடர்பான பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட இப்படிப்பு கைகொடுக்கிறது. சர்க்கரை மற்றும் அதைச் சார்ந்த தொழில்களில் தொழில்நுட்ப உதவி வழங்குவது பற்றிப் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆலைகள், கொதிகலன்கள், மின்நிலையம், நீராவிச் சமனிலை, உபரி மின்உற்பத்தி போன்ற துறைகள் சார்ந்து இத்தொழில்நுட்பம் கற்பிக்கப்படுகிறது. இப்படிப்பு முடித்தவர்கள், சர்க்கரை ஆலைகளில் உதவிப்பொறியாளர், உற்பத்திப் பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். பாடப்புத்தக அறிவுடன், கள அறிவையும் மாணவர்கள் பெறுகின்றனர். தேசிய சர்க்கரை நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் இப்படிப்புக்கு விண்ணப்பிக்க, மாணவர்கள் இத்துறை சார்ந்த முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. வெவ்வேறு அடிப்படையில் 25 மாணவர்கள் ஆண்டுதோறும் சேர்க்கப்படுகின்றனர். பான்-இந்தியா நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும். படிப்புக்காலம் 18 மாதங்கள். பயிற்சிக் கட்டணமான 22 ஆயிரத்து 660 ரூபாயை இரு தவணைகளில் செலுத்தலாம். மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், புரடக்ஷன், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் டெக்னாலஜி மற்றும் இணையான பாடங்களில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். மேலும் விவரங்களுக்கு www.nsi.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். M.Sc., And PG DIploma In Bioinformatics, Biotechnology And Cheminformatics கடந்த பத்தாண்டுகளில் உயிரியல் துறை, உயிரி தொழில்நுட்பம், உயிரிதகவலியல் என பல்வேறு துறைகளாக விரிவடைந்திருப்பதை உணர்ந்திருக்கிறோம். உயிரிதகவலியல் துறையில் கம்ப்யூட்டர்கள் சேகரித்தல், சேமித்தல், பகுப்பாய்வு செய்தல், உயிரி மற்றும் மரபியல் தகவல்களை உள்ளீடு செய்தல் போன்ற பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. உயிரிப் பயன்பாட்டியல் உயிர்க்கனிமங்கள், உயிர்ச்செயலியல், பொறியியல், தொழில்நுட்பம், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. உயிரித் தகவலியல் துறையும், கணித, கம்ப்யூட்டர், புள்ளிவிவரத் தரவுகளை ஆய்வு செய்தல், ஒருங்கிணைத்தல் பகுத்தாய்தல், மூலக்கூறு, மரபணு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. பெங்களூரு, உயிரித்தகவலியல் மற்றும் பயன்பாட்டு உயிரித் தொழில்நுட்பவியல் நிறுவனம்(IBAB) இந்தியத் தகவல்தொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கும் முக்கியமான ஆய்வு நிறுவனமாகும். இந்நிறுவனம் 18 மாத கால எம்.எஸ்சி., பயோ இன்பர்மேடிக்ஸ், பயோ டெக்னாலஜி படிப்பை வழங்குகிறது. இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் இதற்கான பட்டத்தை வழங்கும். PG Diploma படிப்பும் மூன்று பருவத்தேர்வுகளுடன் 18 மாத கால அவகாசத்தைக் கொண்டுள்ளது. இப்படிப்புகள், பயோடெக்னாலஜி மற்றும் அறிவியல் சார்ந்த துறைகளுக்குள் நுழைவதற்கு ஏதுவாக அமைகின்றன. மேலும் விவரங்களுக்கு http://www.ibab.ac.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். Diploma In Radiological Physics மும்பை பாபா அணுமின் ஆராய்ச்சி நிலையம், அணுக்கரு தொடர்பான ஆய்வுகளில் தலைசிறந்த இந்திய மையம் ஆகும். ரேடியாலஜிக்கல் பிசிக்ஸ் என்பது இயற்பியல் துறையின் ஒரு பிரிவாகும். ரேடியாலஜிக்கல் பிசிக்ஸ் ரேடியோ ஆக்டிவிட்டி, அணு, ஆல்பா, பீட்டா, காமா கதிர்கள், எக்ஸ் கதிர்கள் போன்றவற்றுடன் தொடர்புடையது. மருத்துவத்துறையிலும் ரேடியேஷன் தெரபி, இதனுடன் தொடர்புடையதே. பாபா அணுமின் ஆராய்ச்சி நிலையம், ரேடியாலஜிக்கல் துறையில் டிப்ளமோ படிப்பை வழங்குகிறது. 25 மாணவர்களில் ஐந்து பேர் புரவலர்(ஸ்பான்சர்) அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றன. முதுநிலை இயற்பியல் பட்டதாரிகள் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால், விண்ணப்பிக்கலாம். ஸ்பான்சராக தேர்வு செய்யப்படுபவர்கள் ரேடியோ தெரபி தொடர்பாக குறைந்தபட்சம் ஓராண்டு பணி முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்களுக்கு http://www.barc.ernet.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். கடல்சார்ந்த இளநிலைப் படிப்புகள்(Maritime Industry) Maritime என்பது கடலுடன் தொடர்புடைய செயல்பாடுகளைக் குறிக்கும். துறைமுகம், சரக்கு கையாளுதல் போன்றவற்றை உள்ளடக்கியுள்ள கடல்சார் வணிகம் இந்திய பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. Indian Maritime University இத்துறை சார்ந்து B.sc.,Nautical science, B.Tech Marine engineering, B.Sc., Martime Science, B.Tech Naval Architecture and ocean engineering உள்ளிட்ட படிப்புகளை வழங்குகிறது. படிப்பை முடித்த மாணவர்கள் DRDO., இந்திய கப்பற்படை, கப்பல் சரக்குப் போக்குவரத்து, கப்பல் கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிபுரியலாம். மாணவர்கள் ஐ.ஐ.டி.,களால் நடத்தப்படும் இணை நுழைவுத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் போர்ட் மேனேஜ்மென்ட், குஞ்சலி மார்க்கர் ஸ்கூல் ஆப் மரைன் இன்ஜினியரிங், மரைன் இன்ஜினியரிங் அண்டு ரிசர்ச் இன்ஸ்டிடியூட், டிரெய்னிங் ஷிப் சாணக்யா போன்றவை இப்படிப்புகளை வழங்கும் வேறு கல்வி நிறுவனங்களாகும். மூன்று முதல் நான்கு ஆண்டு கால படிப்புக்கு பிளஸ் 2 வில், இயற்பியல், வேதியியல், கணிதம், ஆங்கில பாடங்களுடன் முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி.,/எஸ்.டி., மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. மேலும் விவரங்களுக்கு http://www.imu.nic.in என்ற இணையதளத்தை அணுகலாம். B.Tech in Aerospace, Avionics & Physical Sciences வானியல் தொடர்பான படிப்புகளுக்கு எப்போதும் வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆகும். இந்நிறுவனம் மூன்று B.Tech படிப்புகளை இத்துறையில் வழங்குகிறது. B.Tec in Aerospace Engineering, Avionics, Physical Sciences என்ற படிப்புகள் இத்துறை சார்ந்து வழங்கப்படுகின்றன. மாணவர்கள், பிளைட் மெக்கானிக்ஸ், ஏரோ டைனமிக்ஸ், தெர்மல் அண்டு புரொபல்சன், ஸ்ட்ரக்சர் அண்டு டிசைன், Manufacturing சயின்சஸ் போன்ற துறைகளில் தங்கள் வேலைவாய்ப்பை அமைத்துக் கொள்ளலாம். திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், இஸ்ரோ, அகமதாபாத் ஸ்பேஸ் அப்ளிகேஷன் சென்டர், பெல், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் போன்ற நிறுவனங்களில் பணிபுரியவும் வாய்ப்புள்ளது. விண்வெளித் தொழில்நுட்பம் இயற்பியல், வேதியியல், கணிதம் போன்றவற்றை உள்ளடக்கிய ஒன்றாகும். அகில இந்திய சேர்க்கைத் தேர்வின் அடிப்படையிலேயே(ISAT) மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். நான்காண்டு படிப்பாக வழங்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்ச்சி, இன்டர்மீடியட் ப்ரீ யுனிவர்சிடி தேர்வு, NDA படிப்பின் இறுதியாண்டு General certificate Education Exam, High School certificate Exam of the cambridge university or International Baccalaureate Diploma of the International Baccalaureate office, HSC Vocational exam and SSS Exam conducted by National Insttitutue of Open Schooling With a minimum of 5 subjects போன்ற தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு http://www.ist.ac.in என்ற இணையதளத்தை அணுகலாம். Post graduate Internship in Radio Astronomy ரேடியோ அலைகள் தொடர்பான துறையில் ஆர்வமுள்ளவர்கள் இப்படிப்பை தேர்ந்தெடுக்கலாம். பேரண்டத்தில் புதிய பொருள்களைக் கண்டுபிடிப்பதிலும், அங்கிருந்து ரேடியோ அலைகள் பெறப்படுவது குறித்தும் ஆய்வில் ஈடுபடலாம். அடிப்படை இயற்பியல் நுணுக்கமும், கம்ப்யூட்டேஷன், தரவு பகுப்பாய்வு, அடிப்படை வானியல் ஆகியவற்றின் ஒருங்கமைவாக இப்பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கும். இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பம் பயிலும் மாணவர்கள் ஓராண்டு பயிற்சியாக இதில் சேரலாம். தேர்வு செய்யப்படும் மாணவர்கள், GMRT தொலைநோக்கியைப் பயன்படுத்தி ஆய்வு செய்யும் வாய்ப்பினைப் பெறுவர். மேலும் NCRA, GMRT ஆகியவற்றில் ஊக்கத்தொகை பெற்று உடன் ஆய்வு செய்யும் வாய்ப்பையும் பெறலாம். NCRA வில் இணைந்து ஆய்வு மாணவராக முனைவர் பட்ட ஆய்விலும் ஈடுபடலாம். மேலும் விவரங்களுக்கு http://ncra.tifr.res.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். கம்ப்யூட்டர் தடயவியல் மற்றும் சைபர் செக்யூரிட்டி சான்றிதழ் படிப்பு தேசிய நிதி மேலாண்மை நிறுவனம்(NIFM) மூன்று மாத சான்றிதழ் படிப்பை வழங்குகிறது. தங்குமிடம், உணவு உட்பட 67 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். எந்தப் பட்டப்படிப்பை முடித்திருந்தாலும், கம்ப்யூட்டர் தொடர்பான பிரிவில் பணியாற்றுபவர்கள் விண்ணப்பிக்கலாம். இன்ஜினியரிங், தொழில்நுட்பம், எம்.சி.ஏ., எம்.டெக்., போன்ற படிப்புகளை முடித்திருந்தால் கூடுதல் அனுகூலம். இச்சான்றிதழ் படிப்பின் தலைப்பே, எதுகுறித்த பயிற்சி என்பதைத் தெளிவுபடுத்தும். தொழில்நுட்ப உலகத்தில் இப்படிப்பு தவிர்க்க முடியாத ஒன்றும் கூட. இந்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி பெற்ற NIFM நிறுவனம் குஜராத் தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இச்சான்றிதழ் படிப்பை வழங்குகிறது. இத்துறையில் போதுமான நிபுணர்களை உருவாக்குவதே இப்படிப்பின் நோக்கம். இந்நிறுவனம் நிதிமேலாண்மைத் துறையில் இரண்டாண்டு முதுகலைப் படிப்பையும் வழங்குகிறது. இப்படிப்பு AICTE மற்றும் AIU அங்கீகாரம் பெற்றது. மேலும் விவரங்களுக்கு www.nifm.ac.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.