உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு உடற்கல்வியை கட்டாயமாக்க பரிந்துரை

சென்னை: “ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளி மாணவர்களுக்கு, உடற்கல்வி பாடத்தை கட்டாயமாக்க வேண்டும் என தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம், தமிழக அரசுக்கு பரிந்துரைக்கவுள்ளது,” என அப்பல்கலைக்கழக துணைவேந்தர் திருமலைச்சாமி தெரிவித்தார். தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தின் சார்பில், தமிழக பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி சென்னையில் நடந்தது. பயிற்சியின் நிறைவு விழாவில், பல்கலைக் கழக துணைவேந்தர் திருமலைச்சாமி பேசியதாவது:பள்ளி மாணவர்களுக்கு உடற்கல்வி பாடத்தை கட்டாயமாக்க தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தின் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு உடற்கல்வியை கட்டாயமாக்க வேண்டும் என பரிந்துரைக்கவுள்ளது. இதன்படி, மாணவர்களுக்கு 50 சதவீத எழுத்துப் பாடமும், 50 சதவீத செய்முறை பாடமும் இடம்பெறும். எழுத்துப் பாடத்தில் விளையாட்டுப் பயிற்சியின் பயன்கள், விளையாட்டின்போது காயங்கள் ஏற்படாமல் பாதுகாப்பாக இருப்பது குறித்த கல்வி, முதலுதவி உள்ளிட்டவை இடம்பெறும். செய்முறை பாடத்தில் கோகோ, கபடி, கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட 15 விளையாட்டுக்களில் ஏதாவது ஒன்றை மாணவர்கள் தேர்வு செய்து பயிற்சி பெற வேண்டும். இன்னும் ஒரு மாதத்தில் இந்த பரிந்துரை, அரசிடம் வழங்கப்படும். இப்பரிந்துரையை  அரசு ஏற்றுக்கொள்ளும் என நம்புகிறேன். அவ்வாறு ஏற்றுக் கொண்டால், அடுத்த கல்வியாண்டிலிருந்து பள்ளி மாணவர்களுக்கு உடற்கல்வி கட்டாயமாக்கப்படும். பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மருத்துவத் துறையை ஆரம்பிக்க மத்திய அரசு ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. தமிழக அரசிடமிருந்து நிதி கிடைத்தவுடன் இத்துறை துவக்கப்படும். இவ்வாறு திருமலைச்சாமி பேசினார். நிகழ்ச்சியில் பேசிய வி.ஐ.டி., பல்கலைக்கழக இணைவேந்தர் செல்வம், “விளையாட்டு ஆசிரியர்கள் தான் பள்ளி மாணவர்களுக்கு முன்மாதிரி. உடற்கல்வி ஆசிரியர்கள் தான் மாணவர்களை நல்ல உடற்கட்டுடன் இருக்க வைக்கும் டாக்டர்கள்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்