மீண்டும் உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியடைகிறதா?
உலகப் பொருளாதாரம் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருப்பதால், எந்த நாட்டில் எப்போது பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என்பதைக் கணிப்பது முன்னணிப் பொருளாதார வல்லுநர்களுக்கே கடினமாக இருக்கிறது. அமெரிக்கப் பொருளாதாரம் மீண்டும் மீண்டும் தனது வலுவையும் நெருக்கடிகளைத் தாங்கும் சக்தியையும் மாறும் சூழலுக்கேற்ப தகவமைத்துக்கொள்ளும் திறனையும் அதன் மூலம் தன்னைப் புதுப்பித்துக் கொள்வதையும் வெளிக்காட்டி வந்திருக்கிறது. அமெரிக்க அரசு, இதர துறைகள் மற்றும் நாடாளுமன்றம் ஆகியவை பொருளாதார வளர்ச்சியை முடுக்கிவிடுவதில் தீவிரமாகப் பங்காற்றி வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக நேரிட்ட வீழ்ச்சியிலிருந்து மீண்டு, மிதமான வளர்ச்சியுடன் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தொடர்ச்சியான நிலையைத் தக்க வைக்கும் வகையில் அமெரிக்கப் பொருளாதாரம் முன்னேறி வருவதாக பல பொருளாதார ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். * நான் 2016ம் ஆண்டு வரை செல்லத்தக்க அமெரிக்க விசா வைத்திருக்கிறேன். எனது பழைய பாஸ்போர்ட்டில் உள்ள பக்கங்கள் தீர்ந்துவிட்டதால், இப்போது புதிய பாஸ்போர்ட் வாங்கியிருக்கிறேன். பழைய பாஸ்போர்ட்டில் உள்ள விசா, புதிய பாஸ்போர்ட்டிலும் செல்லுபடியாகுமா?ஸ்டாலின், எஸ். சென்னை நீங்கள் புதிய விசா பெறத் தேவையில்லை. பயணத்தின்போது இரண்டு பாஸ்போர்ட்டுகளையும் சேர்த்து எடுத்துச் சென்றால் போதுமானது. இது போன்ற மற்றும் பிற கேள்விகளுக்கு விடை காண: www.ustraveldocs.com/in * அமெரிக்க அதிபர் ஒபாமாவும் அவரது குடும்பத்தினரும் ஹவாயிலுள்ள ராணுவ முகாமுக்குச் சென்று கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டார்கள். அதில் ஏதேனும் முக்கியத்துவம் உண்டா?அரிமளம் தளவாய் நாராயணசாமி, பெங்களூர் அமெரிக்க ராணுவத்தின் தலைமைத் தளபதி என்ற முறையில், அதிபர், அவ்வப்போது அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளில் துருப்புகள் முகாமிட்டுள்ள இடங்களில், நேரில் சென்று வீரர்களையும் அவர்களது குடும்பங்களையும் சந்திப்பது வழக்கம். மேலும் அமெரிக்கா, கிறிஸ்து, இஸ்லாம், இந்து, பௌத்தம், யூதம் மற்றும் பல்வேறு நம்பிக்கையுடைவர்களையும், நம்பிக்கையில்லாதவர்களையும் கொண்ட நாடு. உண்மையில், அமெரிக்காவில் குடியேறிய பல வெளிநாட்டவர்கள், தங்கள் மத நம்பிக்கையைப் பாரபட்சமற்ற சூழலில் கடைப்பிடிக்கும் நோக்குடன் வந்தவர்கள். ஒருவர், தனக்கு விருப்பமான எந்த மதத்தையும் தேர்ந்தெடுத்துக் கடைப்பிடிக்க அமெரிக்க அரசியல் சாசனம் அனுமதிக்கிறது. ஜனவரி 16ம் தேதி மத சுதந்திர தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத நம்பிக்கை சார்ந்த விடுமுறை தினங்களில், அது ரமலான் பண்டிகையாக இருக்கட்டும் அல்லது கிறிஸ்துமஸ், தீபாவளி மற்றும் குருநானக் பிறந்ததினமாக இருக்கட்டும், அதிபர் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்வதுடன் இவை தொடர்பான நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். * நான் இந்தியாவில் ஒரு வேலைவாய்ப்பு ஆலோசனை ஏஜென்ஸியைத் தொடங்குவதில் முனைப்புடன் உள்ளேன். அமெரிக்க நிறுவனங்கள் தங்களிடம் வேலை செய்ய எதிர்பார்க்கும் தகுதிகளோடு உரிய நபர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பவும் ஆர்வமாயிருக்கிறேன். எனது வேலைவாய்ப்பு ஏஜென்ஸியை அமெரிக்க நிறுவனங்களின் அங்கீகாரம் பெற்றதாக உருவாக்குவது எப்படி?செந்தில், கோயம்புத்தூர் பல பொது மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளுக்கான விளம்பரம், அந்தந்த நிறுவனங்களின் இணையதளங்களில் வெளியிடப்படும். மற்றவர்கள் வேலைவாய்ப்பு ஏஜென்சிகள் வழியாகவும், வேலைவாய்ப்புள்ள நகரங்களில் வெளிவரும் உள்ளூர் செய்தித் தாள்களில் விளம்பரம் செய்வதன் மூலமாகவும் மற்றும் இணையதளங்களிலும் வெளியிடுகின்றனர். இந்திய நிறுவனங்களைப் போல, அமெரிக்க நிறுவனங்களும் தங்கள் தேவைக்கு ஏற்ப உரிய திறனும் அனுபவமும் உள்ள நபர்களையே தேடுகின்றன. அமெரிக்க வேலைவாய்ப்பு அறிவிப்புகள் பொதுவாக, விண்ணப்பிக்கும் நபர்கள் அந்த வேலையைப் பெறுவதற்குரிய தகுதி, அனுபவம் மற்றும் போட்டித் திறன் ஆகியவற்றைக் குறிப்பதாக இருக்கும். வேலை வாய்ப்பளிக்கும் நிறுவனங்களை நேரடியாகத் தொடர்பு கொள்வது, இணையதளம் மற்றும் செய்தித் தாள்களில் வெளியாகும் விளம்பரங்கள் மற்றும் வேலைவாய்ப்பு ஏஜென்சிகள் ஆகியவையே அமெரிக்க நிறுவனங்களில் வேலை வாய்ப்பை அறிவதற்கான சிறந்த வழிகள். அவற்றின் மூலம், அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புக்கு ஒருவர் எந்த அளவுக்குத் தகுதியுடையவராக இருக்கிறார் என்பதைத் தீர்மானித்துக் கொள்ளலாம். * பருவநிலை மாற்றங்கள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நவீன தொழில்நுட்பம் மூலம் அமெரிக்க அரசு எவ்வாறு கண்டறிகிறது? இது பற்றி விரிவாக விளக்க முடியுமா?பாலகுமார், திருச்சி பருவநிலை மாற்றம் சார்ந்த பிரச்சினைகளை அமெரிக்க அரசு தீவிரமாகக் கவனித்து வருகிறது. அதிபர் ஒபாமா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் போன்ற தலைவர்கள், மனிதர்களால் பருவநிலையில் உருவாகும் எதிர்மறைத் தாக்கத்தைக் குறைக்க, கல்வி, சர்வேதச ஒத்துழைப்பு மற்றும் பசுமைத் தொழில்நுட்ப முன்னேற்றம் வாயிலாகத் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அமெரிக்காவும் இந்தியாவும் தங்கள் பொது இலக்காக இதைக் கொண்டுள்ளன. தொழில்நுட்பத்தில் முன்னேறியவை என்ற வகையில், இரு நாடுகளும் பசுமைத் தொழில்நுட்பத்தை முன்னெடுத்துச் செல்வதில் முன்னணியில் நின்று ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. அமெரிக்க அரசு இந்தப் பிரச்சினைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் வகையில் செயல்படுகிறது. அதிபர் ஒபாமா, அமெரிக்கச் சுற்றுச்சூழல் கொள்கையை ஒருங்கிணைக்கும் திறமை வாய்ந்த ஆலோசகர் குழுவை நிறுவியிருக்கிறார். இக்குழு, சுற்றுச்சூழல் தரக் குழு(CEQ) என்றழைக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் தொடர்பான அமெரிக்க அரசின் அனைத்து முயற்சிகளையும் ஒருங்கிணைப்பதே இக்குழுவின் பிரதானப் பணியாகும். இதுதவிர, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏஜென்சி(EPA) என்றொரு அமைப்பும் செயல்படுகிறது. தனியார் நிறுவனங்களின் செயல்பாட்டைக் கண்காணித்து, உரிய சுற்றுச்சூழல் தரத்தைப் பராமரித்து, மனித மற்றும் சுழல் ஆரோக்கியத்தை நிலைநாட்டுவது இந்த அமைப்பின் பணியாகும். வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்களுடன் இந்த அமைப்பும் அதிபரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. அமெரிக்கச் சுற்றுச்சூழல் அமைப்புகள் இந்தியாவிலுள்ள அதுபோன்ற அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றுகின்றன. தூய்மையான எரிசக்தியை உருவாக்குவது தொடர்பான கூட்டு ஒப்பந்தம் (PACED) உள்ளிட்ட பசுமைத் தொழில்நுட்பத்தை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியில் இருநாடுகளும் இணைந்து செயல்படுகின்றன. தூய்மையான எரிசக்தி தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கும், இழப்பின்றி எரிசக்தியை பயன்படுத்தும் வழிகளைப் பெருக்குவதற்கும் பணியாற்றும் அமெரிக்க மற்றும் இந்திய அமைப்புகளுக்கு இக் கூட்டு ஒப்பந்தத்தின்படி மானிய உதவி அளிக்கப்படுகிறது. கேளுங்கள் அமெரிக்காவை... &'தினமலர்&' வாசகர்களின் அமெரிக்கா குறித்த அனைத்துவிதமான சந்தேகங்களுக்கும், அமெரிக்கத் துணைத் தூதரகம், சென்னை பதில் அளிக்கிறது. ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறன்று வெளியாகும் இந்த பிரத்யேக பகுதிக்கு உங்களது கேள்விகள் மற்றும் கருத்துக்களை உடனே அனுப்புங்கள். தினமலர்&'கேளுங்கள் அமெரிக்காவை...&'39, ஒயிட்ஸ் ரோடு,சென்னை - 600 014.இமெயில்: askamerica@dinamalar.in