சிவகாசியில் ‘ஜெயித்துக்காட்டுவோம்’: மாணவர்களுக்கு ஆலோசனை
சிவகாசி: தினமலர் டி.வி.ஆர். அகாடமி சார்பில் 10ம் மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான ‘ஜெயித்துக் காட்டுவோம் 2008’ நிகழ்ச்சி சிவகாசியில் நடந்தது. கம்மவார் திருமண மண்டபத்தில் நடந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலைகழகமும் இணைந்து வழங்கியது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழங்கிய ஆலோசனைகள்: ஆங்கிலம் (காளிச்சாமி, பூவநாதபுரம், அரசு உயர்நிலைப்பள்ளி, சிவகாசி): ஆர்வமுடன் படித்தால் ஆங்கிலத்தை போன்று எளிதான பாடம் வேறு இல்லை. பிறருக்கு தெளிவாக புரியும் வகையில் கையெழுத்து இருக்க வேண்டும். ‘லெட்டர் ரைட்டிங், இ.ஆர்.சி. மற்றும் பாராகிராப் ரைட்டிங்’ ஆகியவற்றில் அவற்றிக்கு முறையாக உட்தலைப்புகள் மற்றும் ஸ்டெப்களை கடைப்பிடிப்பதன் மூலம் எளிதாக அதிக மதிப்பெண் பெறலாம். கணிதம் (ராமசாமி, சிவகாசி இந்து நாடார் விக்டோரியா மேல்நிலைப்பள்ளி சிவகாசி): சூத்திரங்களை மாணவர்கள் தெளிவாக படித்துக் வைத்துக் கொள்ள வேண்டும். தேர்வில் கணக்கிற்குரிய சூத்திரங்களை எழுதியே கணக்குகளை செய்ய வேண்டும். வரைபடக் கணக்குகளை பிழையின்றி செய்ய பழகிக் கொண்டால் கணக்கு பாடத்தில் அனைவரும் எளிதாக நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறலாம். அறிவியல் (நாராயணசாமி, இந்து தேவமார் உயர்நிலைப்பள்ளி, சிவகாசி): கேள்விகளுக்கு கட்டாயம் அவற்றிக்குரிய அலகுகளுடன் பதிலளிக்க வேண்டும். தேவையான கேள்விகளுக்கு தெளிவாக படம் வரைந்து பாகங்களை குறித்துக் காட்ட வேண்டும். மேலும் சமன்பாடுகளை பிழையில்லாமல் எழுத வேண்டும். கடந்த 5 ஆண்டுகளின் தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும். சமூக அறிவியல் (சசிகிரான், அம்மன் கோயில் பட்டி நகராட்சி உயர்நிலைப்பள்ளி, சிவகாசி): தலைவர்களின் முழக்கங்கள், உடன்படிக்கைகள், முக்கிய நிகழ்வுகள் நடந்த ஆண்டுகள் ஆகியவற்றை மாணவர்கள் தெளிவாக சந்தேகமின்றி படித்துக் கொள்ள வேண்டும். முக்கிய தொழிற்சாலைகள், கனிமங்கள் கிடைக்கும் இடங்கள் குறித்த கேள்விகள் அடிக்கடி கேட்கப்படுகின்றன. வரை படங்களில் முக்கிய இடங்களை வகுப்பில் அடிக்கடி கோடிட்டு பழகிக் கொள்வதன் மூலம் தேர்வில் பிழையின்றி பதிலளிக்கலாம். * பூவநாதபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி செல்வரூபிகா முதல் மாணவியாக நிகழ்ச்சிக்கு காலை 4 மணிக்கும், அதே பள்ளியை சேர்ந்த மாணவி மகாலட்சுமி காலை 5 மணிக்கும் வந்தனர். அம்மாணவிகளின் ஆர்வத்தை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. * நிகழ்ச்சியின் போது திருத்தங்கல் மாணவர் ராமநாதன் மற்றும் சாட்சியாபுரம் மாணவி நாகஜோதி ஆகியோர் நாங்கள் பொதுத் தேர்வில் மாநிலத்திலே முதலிடம் பெறுவோம் என மேடையில் கூறினர். அவர்களின் உறுதியை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆசிரியர்களின் அறிவுரை: ஆங்கிலம் (ஜெயலட்சுமி, எஸ்.ஆர். அரசு மேல்நிலைப்பள்ளி, திருத்தங்கல்): மாணவர்கள் தேர்வில் மதிப்பெண் பெறுவதற்கு மட்டுமில்லை, நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று பணி பெறுவதற்கு ஆங்கிலம் பாடம் முக்கியம். மனப்பாடப் பகுதிகளை நன்றாக படித்து பிழையின்றி எழுத பழகிக் கொண்டால் எளிதாக அதிக மதிப்பெண் பெற முடியும். கணிதம் (மேரிபாய், முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி, சிவகாசி): விடுதலின்றி அனைத்து பகுதிகளையும் நன்றாக படித்துக் கொள்ள வேண் டும். குறிப்பாக முதல் 3 பாடங்களிலிருந்தே 90 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படுகின்றன. மாணவர்கள் பயமின்றி தெரிந்த கேள்விகளுக்கு அடித்தல் திருத்தலின்றி குறித்த நேரத்தில் எழுத தங்களை பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும். வேதியியல் (இசபெல்லா, எஸ்.ஆர். அரசு மேல்நிலைப்பள்ளி, திருத்தங்கல்): பார்முலாக்கள், குறியீடுகள் மற்றும் அம்புகுறிகளை சமன்பாடுகளில் பிழையின்றி குறிக்க பழகிக் கொள்ள வேண்டும். பாடங்களின் பின்னால் கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளிலிருந்தே ஒருமார்க் வினாக்கள் கேட்கப்படுகின்றன. இயற்பியல் (வனராஜ் (ஏ.யு. நகராட்சி மேல்நிலைப்பள்ளி, சிவகாசி): எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பாடங்களிலிருந்து அதிக மதிப்பெண்களுக்கு கேள்விகள் தொடர்ந்து கேட்கப்படுகிறது. மாணவர்கள் அப்பாடங்களை நன்றாக படித்துக் கொள்ள வேண்டும். மேலும் தேவையான பாயிண்டுகளை தெளிவாக அடித்தலின்றி எழுத வேண்டும். விலங்கியல் (வீரமாமுனிவர் (வேளாங்கண்ணி மாதா மேல்நிலைப்பள்ளி, சிவகாசி): தேவையான இடங்களில் தெளிவாக படம் வரைந்து அதன் பாகங் களை குறித்துக் காட்ட வேண்டும். தேர்வில் மறக்காமல் வினா எண் குறித்த பின்னரே பதிலை எழுததொடங்க வேண்டும். தாவரயியல் (வெங்கடாசாரி, சி.எஸ். இந்து மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர்): செய்முறை தேர்வுகளோடு தொடர்புடைய 1, 2, 5 பாடங்களின் கேள்விகளுக்கு தெளிவாக படங் களை வரைந்து பாகங்களை குறிக்க மாணவர்கள் தங்களை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். 5 வது பாடத்திலுள்ள வேதியியல் சுழற்சிகள் பிழையின்றி எழுதி பயிற்சி எடுத்துக் கொள்வதன் முலம் அதிக மதிப்பெண் பெறமுடியும்.