உள்ளூர் செய்திகள்

அழகப்பா பாலிடெக்னிக் மாணவர்கள் போராட்டம்

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பாலிடெக்னிக் மெக்கானிக்கல் பிரிவு மாணவர்கள், ஆசிரியர் அடிப்பதாக கூறி திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசார் அவர்களை விரட்டி அடித்ததால் அலறி அடித்து ஓடினர். காரைக்குடி அழகப்பா பாலிடெக்னிக்கில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவுகள் உள்ளன. 900 மாணவர்கள் இரண்டு ஷிப்டாக பயின்று வருகின்றனர். நேற்று காலை கல்லூரிக்கு வந்த மூன்றாமாண்டு மெக்கானிக்கல் மாணவர்கள் 140 பேர் தற்காலிகமாக பணியாற்றும் ஆசிரியர்கள் தரக்குறைவாக பேசுவதுடன், அடிக்கிறார்கள், இடைவேளை விட மறுக்கிறார்கள், செய்முறை மதிப்பெண்ணை குறைத்து விடுவேன் என மிரட்டுகிறார்கள், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி பாலிடெக்னிக் மெயின் நுழைவு வாயிலின் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அங்கு வந்த நெடுஞ்சாலை பிரிவு போலீசாரில் ஒருவரான காந்தி, வாகனத்தை விட்டு இறங்கியதும், மாணவர்களிடம் எதை பற்றியும் விசாரிக்காமல் அவர்களை ஓட ஓட விரட்டினார். ஒரு மாணவரை கையால் தாக்கினார். போலீசார் விரட்டுவதை கண்டு மாணவர்கள், நாலாபுறமும் சிதறி ஓடினர். கல்லூரி நுழைவு வாயிலில் நின்றிருந்த ஆசிரியர்கள் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. மாணவர்கள் கூறும்போது: உள்ளே ஆசிரியர் அடிக்கிறார் என வெளியே வந்தால், வெளியே காந்தி என்ற போலீஸ்காரர் விரட்டி விரட்டி அடிக்கிறார். எதையும் விசாரிக்காமல் அடித்தார். எங்களுடைய கோரிக்கையை கேட்காமல் இரு தரப்பிலும் அராஜகத்தை கையாளுகின்றனர் என்றனர். முதல்வர் மணிவண்ணன் கூறும்போது: மெக்கானிக்கல் பிரிவில் உள்ள மாணவர்களில் ஒரு சிலர் டெஸ்ட் வைத்த போது உரிய உபகரணங்களின்றி வந்துள்ளனர். அவர்களை ஆசிரியர் கண்டித்துள்ளார், அடிக்கவில்லை. 900 பேருக்கு 45 ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஏழு ஆசிரியர்களே உள்ளனர். 70 சதவீதம் தற்காலிக ஆசிரியர்கள் மூலம் தான் பாடம் நடத்துகிறோம். தற்காலிக ஆசிரியர்கள் குறைந்த வயதுடையவர்களாக இருப்பதால் மாணவர்கள் அவர்களை மதிப்பதில்லை. உள்ளே வளாகத்துக்குள் இருக்கும் வரை தான் மாணவர்களுக்கு நாங்கள் பாதுகாப்பு. வெளியே மாணவர்களை போலீஸ்காரர்கள் தாக்கினால் அது குறித்து எங்களுக்கு தெரியாது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்